உலகம் சுற்றும் சினிமா - 22: பழமைக்கு இங்கு இடமில்லை


ஒரு சராசரி திரைக்கதை என்பதின் இலக்கணம் என்ன? ஒரு நல்லவன் இருக்க வேண்டும். ஒரு கெட்டவன் இருக்க வேண்டும். கெட்டவனை வென்றெடுக்க நல்லவனுக்கு ஒரு காரணி இருக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களை வைத்துக்கொண்டு பலதிரைக் கதைகளை எழுதலாம். ஆனால் இந்த அளவீடுகள் ஏதுமின்றி ஒரு படத்தைக் காவியமாகப் படைக்க முடியும் என்பதற்கு உதாரணம்தான் 2007-ல் வெளிவந்த ‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’.

சுவாரசியம் நிறைந்த, அதேசமயம் நுட்பமான திரைக்கதைகளுக்குப் பெயர்போன ஜோயல் கோயன் மற்றும் ஈதன் கோயன் (கோயன் பிரதர்ஸ்) படைப்பில் உருவான இத்திரைப்படம், நியோ-வெஸ்டர்ன் வகை படம் என்று சொல்லப்பட்டாலும் இதுவரை வந்த எந்த வெஸ்டர்ன் படங்களைவிடவும் முற்றிலும் மாறுபட்ட ஒரு படைப்பாகும். கார்மெக் மெக்காத்தி எழுதிய ‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ நாவலைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

வழக்கமாகக் கதைக்கு ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு ஒன்றும் இருந்தாக வேண்டும் என்பது வாடிக்கையால் புரையோடிப் போன மனித மனத்தின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புக்குப் பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்த படம் இது.

விதியின் புதிர்ப் பாதை

தன் தாத்தா, அப்பா அனைவரும் போலீஸ் ஷெரீஃப் பணியில் இருந்ததைப் பெருமையாக வர்ணிக்கும் ஷெரிஃப் டாம் பெல்லின் குரலுடன் கதை தொடங்கும். வறுமையில் தன் மனைவியுடன் வாடும் சாமானியன் லில்விலின் மாஸ், இப்படத்தின் பிரதான நாயகன். ஒரு நாள் வேட்டைக்குச் செல்வான். அங்கு போதைமருந்து கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலர் கொல்லப்பட்டுக் கிடப்பதைப் பார்ப்பான். அங்கிருந்து இரண்டு மில்லியன் டாலர் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவான். அவனைப் போதைமருந்து கும்பல்கள் துரத்த ஆரம்பிக்கும். அவனிடம் இருக்கும் பணத்தை மீட்டெடுக்க சைக்கோ கொலையாளியான ஏன்டான் சிகூரை ஒரு கும்பல் பணியமர்த்தும். கொட்டிலில் மாடுகளைக் கொல்லப் பயன்படும் ஸ்டன் கன்னை வைத்து முகத்தில் உணர்ச்சிகளே இல்லாமல் சர்வ சாதாரணமாகக் கொலை செய்யும் ஏன்டான் சிகூர் கதாபாத்திரம்தான் படத்தின் ஆன்ம பலம். இவர்களிடமிருந்து மாஸ் தப்பித்தானா, அந்த இரண்டு மில்லியன் டாலர் பணம் என்னவானது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

எப்போதும் நல்லவன்தான் ஜெயிப்பான் என்பதில் யதார்த்தம் இல்லை என்பதே உண்மை. திரைப்பட மாயையிலிருந்து வெளியே 
யோசித்துப் பார்த்தால் நல்லவன் எப்போதும் ஜெயிப்பதில்லை. இன்னும் ஆழமாக யோசித்தால் நல்லவன் என்று யாரும்இங்கில்லை. இத்திரைப் படத்தின் நாயகனான லில்விலின் மாஸும் நல்லவன் இல்லை. அவன் எடுத்துவந்த இரண்டு மில்லியன் டாலர் அவனுக்குச் சொந்தமானதில்ல. அவன் ஒரு சந்தர்ப்பவாதத் திருடன்.

‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ என்றால் வயதானவர்களுக்கான தேசம் இல்லை என்று அர்த்தம் இல்லை. நல்லது செய்தால் 
நல்லதே நடக்கும், கெட்டவன் தோற்பான் என்ற பழமையான மரபுகளில் நம்பிக்கை  கொண்டவர்களுக்கான தேசம் இதுவல்ல 
என்பதே பொருள். அதை உணர்த்தும் வகையில்தான் ஷெரீஃப்டாம் பெல் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். தொடர் கொலையைச் செய்யும் ஏன்டான் சிகூரைப் பிடிக்க முடியாமல், இரண்டு மில்லியன் டாலரையும் கைப்பற்ற முடியாமல், மாஸைக் காப்பாற்றிவிடுவதாக அவன் மனைவி கர்லாவுக்குக்  கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் யதார்த்தத்துடன் போராட முடியாமல் போலீஸ் வேலையை விட்டு விலகி வீட்டில் முடங்கும் டாம் பெல் கதாபாத்திரம்தான் படத்தின் அடிநாதம்.

படத்தின் இறுதிக்காட்சியில் டாம் பெல் தான் கண்ட இரண்டு கனவுகளைத்தன் மனைவிக்கு  விளக்குவார். அந்த வசனங்களில் அவரிடம்  இருக்கும் கடமையாற்றத் தவறிய குற்றவுணர்வையும், நியாய தர்மங்கள் மீது இருந்த அவரது நம்பிக்கைகள் பொய்த்துப்போன கழிவிரக்கத்தையும் சூசகமாக வெளிப்படுத்தியிருப்பார்கள் கோயன் சகோதரர்கள்.

கொடூர வில்லன்

உலக சினிமா வரலாற்றில் சில கதாபாத்திரங்கள் நிலைத்து நிற்கும் தன்மை பெற்றவை.  அவற்றுள் ஒன்றுதான் ஏன்டான் சிகூர் கதாபாத்திரம். வெறும் பார்வை மற்றும் சிரிப்பிலேயே  பார்ப்பவர் மனதில் மிரட்சியை உண்டுபண்ணும்  வகையில் அந்தப் பாத்திரத்தில் நடித்த ஜேவியர் பர்டெம் அசத்தியிருப்பார். அவரின் இந்த அட்டகாசமான நடிப்பே அவருக்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தந்தது. ஒரு கதாபாத்திரத்தின் பண்புகள் சரியாகக் கட்டமைக்கப்படும்போதுதான் மக்களால் அது ரசிக்கப்படுகிறது என்பதற்கு இந்தப் பாத்திரம் சிறந்த உதாரணம்.

குறிப்பாக ஒரு காட்சியில் பெட்ரோல் பங்கின் உரிமையாளரிடம் காசை சுண்டிப்போட்டு அவரிடமே பூவா தலையா என்று கேட்டு அவரைக் கொல்லாமல் விட்டுச்செல்லும் சிகூரின் செயல்  விநோதமாக இருக்கும். அவனைப் பொறுத்தவரை அவன் விதியின் தூதுவன். தனக்கான மரபுகள், விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றும் கொலைகாரன். தனக்குப் பழக்கமான முன்னாள் கொலையாளி ஒருவனைக் கொல்லுவதற்கு முன்பு அவனிடம், “நீ பின்பற்றிய வழிமுறைகள் உன்னை இந்த மரணத்திற்கு அழைத்து வந்திருக்கிறது என்றால், அந்த வழிமுறைகளால் என்ன பயன்?” என்று கேட்பான்  சிகூர். இப்படி தனக்கான விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன்படி கொலைப் பயணத்தைத் தொடரும் கொடூர வில்லனை உருவாக்கிய புகழ் நாவலாசிரியர் கார்மெக் மெக்காத்தியைச் சேரும். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தை மேலும் மெருகேற்றி உலக சினிமா அரங்கில் என்றென்றும் நிலைத்து நிற்கச் செய்த புகழ் கோயன் சகோதரர்களையே சேரும்!

விதி நல்லவனை வதைக்கும், கெட்டவனை வாழவைக்கும். விதி நம் அனைவருக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறது அல்லது அதனிடம் திட்டமே இல்லை என்பதுதான் அதன் திட்டமா என்ற கேள்வி இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்போது நமக்குள் எழும்.
குரேஷிய மொழியில் உருவான சைக்கோ த்ரில்லர் படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

x