சாம்பியன் - திரை விமர்சனம்


தந்தையைக் கொன்ற வில்லனை மகன் பழிவாங்கத்  துடிப்பதுதான் ‘சாம்பியன்’.

பள்ளி மாணவனான விஷ்வாவுக்கு, கால்பந்து விளையாடுவது என்றால் பயங்கர இஷ்டம். ஆனால், அவனுடைய அப்பா மனோஜ் கால்பந்து விளையாடும்போது இறந்ததால், அம்மா அவனைக் கால்பந்து விளையாட அனுமதிப்பதில்லை. ஆனாலும், அம்மாவுக்குத்  தெரியாமல் விளையாடுகிறான். அவனுடைய திறமையைப் பார்த்து, கால்பந்து பயிற்சி அகாடமி ஒன்றில் கோச்சாக இருக்கும் நரேனிடம் அனுப்பி வைக்கிறார் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர். தன் நண்பன் மனோஜின்மகன்தான் விஷ்வா எனத் தெரிந்துகொள்ளும் நரேன், அவனிடம் சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்கிறார். அடுத்தகட்டப் போட்டிக்காகத் தயாராகும் நேரத்தில், அவனுடைய தந்தையின் மரணம் கொலை எனத் தெரிய வருகிறது. எனவே, வில்லனைப் பழிவாங்கத் துடிக்கிறார் விஷ்வா. நினைத்தபடி அவர் பழிவாங்கினாரா இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.

விஷ்வாவுக்கு இதுதான் முதல் படம். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். பதின்பருவத்தில் இருக்கும் மாணவனின் கோபம், கால்பந்தின் மீதான ஆர்வம், காதல் என எல்லா உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். நிஜமான கால்பந்து விளையாட்டு வீரராக இருப்பாரோ என்று நினைக்கும் அளவுக்கு, கால்பந்து விளையாட்டு தொடர்பான காட்சிகளில் சிரத்தையுடன் நடித்துள்ளார்.

சாந்தா கதாபாத்திரத்தில் பொறுப்பான கோச்சாக நடித்துள்ளார் நரேன். தனது நண்பன் மகனின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதற்காகத் தன்னையே ஒப்புக் கொடுக்கும் அழுத்தமான கதாபாத்திரம். தனசேகர் கதாபாத்திரத்தில் வில்லனாக ஸ்டன் சிவா
வின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. கால்பந்து விளையாடிக்கொண்டே மனோஜைத் தீர்த்துக் கட்டுவது, அவரது கதாபாத்திரத்துக்கான புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

x