ஆதம்பாக்கம் போலீஸ் சரகத்தில் அடுத்தடுத்த நாட்களில் சில பெண்கள் ஒரே மாதிரி தற்கொலை செய்து கொள்கின்றனர். அதை விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக பரத். தற்கொலையின் மர்மங்கள் ஒவ்வொன்றாக விலகி, தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாறி... கொலைக்கான விடை இன்ஸ்பெக்டரின் வீட்டுக்குள்ளேயே இருந்தால்..? இதுதான் ‘காளிதாஸ்’ படத்தின் கதை.
திருமணமான சில ஆண்டுகளில் கணவன் மனைவிக்குள் அறுந்துபோகும் அன்னியோன்யத்தை மையமாக வைத்துக்கொண்டு அதனைச் சுற்றி விறுவிறுப்பான த்ரில்லர் கதையை வடிவமைத்து கவனம் ஈர்த்துள்ளார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில்.
அலட்டல் இல்லாத யதார்த்த போலீஸாக கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் பரத். தன் வீட்டைப் பற்றி மேலதிகாரி விசாரிக்கும் போது சங்கோஜத்துடன் பேச்சை மாற்றி வழக்கைப் பற்றிப் பேசும் இடங்களில் அவரின் நடிப்பு மிளிர்கிறது.
கதாநாயகியாக வரும் ஆன் ஷீட்டல் தன் பங்கைச் சிறப்பாகவே செய்துள்ளார். பரத்தின் மேலதிகாரியாக வரும் சுரேஷ் சந்திர மேனன், ஆதவ் கண்ணதாசன், ஏட்டுக் கதாபாத்திரம், என்று கச்சிதமான பாத்திரத் தேர்வுகள் படத்தின் பெரும் பலம்.