திரை விமர்சனம்: அடுத்த சாட்டை


காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

> மாணவர்கள் நலனில் துளிகூட அக்கறை செலுத்தாத ராசிரியர்களும் கல்லூரி முதல்வரும் சகபேராசிரியர் சமுத்திரக்கனியின் நடவடிக்கையால் திருந்துவதும், மாணவர்களின் எதிர்காலம் உயர்வதும்தான்  ‘அடுத்த சாட்டை’.

> சமுத்திரக்கனியின் குரலில்தான் படமே தொடங்குகிறது. 

> அங்கிருந்து க்ளைமாக்ஸ் வரை நிறுத்தாமல் அறிவுரை மழை பொழிந்து கொண்டே இருக்கிறார். அதை மட்டுமே படமாகப் பார்த்தால் பல இடங்களில் உட்கார வைத்து பாடம் எடுப்பதுபோல் இருக்கிறது. அட்வைஸ் மழைக்கு நடுவில், காதலியின் தந்தையிடம் பெண்கேட்கச் செல்லும் இடத்தில் கவனிக்க வைக்கிறார் சமுத்திரக்கனி.

>  மனம் முழுக்க சாதிய உணர்வு,  தான் செய்வதுதான் சரி என்னும் எண்ணம், சமுத்திரக்கனியின் மீது அடங்காத வன்மம், அதிகார ருசியில் தனக்கு கீழே இருப்பவர்களை அடக்கிவைப்பது என  வஞ்சனை சூழ்ந்த கல்லூரி முதல்வராக வாழ்ந்திருக்கிறார் தம்பி ராமையா. க்ளைமாக்ஸ் காட்சியில் தன்நிலையை நினைத்து அவர் திருந்தும்போது வெளிப்படும் நடிப்பு ரசிக்கவைக்கிறது.

> அதுல்யா ரவியின் நடிப்பு மிக நேர்த்தி. தனது பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகச்சிறப்பான பங்களிப்பை  வழங்கியிருக்கிறார். அவர் பேசும் நீள
மான வசனத்திலும், அதன் பின்னான அழுகையிலும் உயிரோட்டம் சேர்க்கிறார். யுவன், ஜார்ஜ் மரியான் ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

>  பேராசிரியர்களே சாதிக் கயிறு கட்டியிருப்பதும், மாணவர்களை ஆசிரியர்கள் சாதியைப் பார்த்து பாகுபாட்டோடு நடத்துவதும் படத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

> இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் கூர்மையடைகிறது. கலைக்கல்லூரிக்குள் மாணவர் பாராளுமன்றம், கேம்பஸ் இன்டர்வியூ, ஆங்கிலத்தில் இருந்த கேள்வித்
தாளை தமிழில் மொழிபெயர்த்தபோது நிகழும் தவறுகள், குறியீடாகக் கடந்துபோகும் நீட் விவகாரம்  போன்ற காட்சிகள் சமூகத்துக்குத்தேவையான பாடங்கள். மாண
வன் ஒருவன் இறந்ததும் சாதி  அமைப்புகள் உள்ளே புகுவதும், அதை முன்னிறுத்திப்  பேரம் பேசுவதும் சில வக்கீல்கள் அதில் இடைத்தரகராக இருப்பதையும் துணிச்சலுடன் சுட்டிக்காட்டியதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.

> ‘படிச்ச வாத்தியார் வேணாம். தினமும் படிக்கிற வாத்தியார்தான் வேணும்’, ‘நம்ம நாட்டுல குற்றங்களுக்குத் தான் தண்டனை இருக்கு... திருந்துற
துக்கு தண்டனை இல்லை’, ‘அப்பா, அம்மா வெச்சபேரை இன்ஷியலா வெச்சுட்டு சாதியவே பேரா வெச்சுக்குறதும் அசிங்கம்’, ‘அதிகாரம் லட்சம் பேர் நின்னாலும் 
முதல் முகத்தைத்தேடி மிரட்டும்’ என்பது உள்ளிட்ட வசனங்கள் கவனிக்கவைக்கின்றன.

> இயக்குநர் அன்பழகனும், சமுத்திரக்கனியும் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். அட்வைஸ் என்பதையே ஒற்றை இலக்காக்கிவிட்டதால் கிடைக்கும் கேப்பில் எல்லாம் அதை செய்யும் முனைப்பிலேயே திரைக்கதை வடிவமைத்துள்ளனர். சிறப்புத் தோற்றததில் சசிகுமாரும் ஒருகாட்சியில் வந்து அட்வைஸ் செய்துவிட்டுச் செல்கிறார்.

> ஜஸ்டின்பிரபாகரனின் இசையில்  ‘எங்க கையில் நாட்டைக் கொடுங்க’,  ‘வேகாத வெயிலுல’ ஆகிய  பாடல்கள்  ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். இராசாமதியின் ஒளிப்பதிவு கச்சிதம்.

>  ‘ஷேக்ஸ்பியர் நாடகத்தை தமிழாக்கம் செஞ்சு, அவன் உயரத்தைத்தாண்டி பேசுவான்’ என தம்பிராமையா, சமுத்திரக்கனியை பார்த்து  பேசும் வசனம் ஒன்றும் 
படத்தில் வருகிறது. ஒருகட்டத்தில், அந்த மனநிலையை நமக்குள்ளும் கடத்திவிடுகின்றனர்.  படத்தில் அங்கங்கே கருத்து சொல்லலாம். ஆனால், படம்  முழு
வதுமே கருத்துமழை பொழிவதால் பல இடங்களில் பொறுமையை சோதிக்கிறது ’அடுத்த சாட்டை’.

x