இந்தப் பூஞ்சோலையே எனக்காகத்தான்!- சீதாவின் மனதை அள்ளும் மாடித் தோட்டம்


பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com

பச்சைப் பசேல் எனப் படர்ந்து கிடக்கிறது பாகற்கொடி. அதிலிருந்து காய்களை மென்மையாகக் கிள்ளிப் பறித்தபடியே, “இன்னைக்கு மதியம் பாகற்காய் கறிதான். இருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்” என்று வரிசைப் பற்கள் மிளிரப் புன்னகைத்தார் சீதா.

‘ஆண்பாவத்’தில் பாவாடை, தாவணியில் பார்த்த இந்த அழகுப் பெண்ணிடம், அனுபவமும் வயதும் கற்றுத் தந்திருக்கும் முதிர்ச்சியும் பக்குவமும் கூடுதல் அழகைச் சேர்த்திருக்கின்றன.

தனது வீட்டின் மாடித் தோட்டத்தில்தான் நாம் போகும்போது காய் பறித்துக்கொண்டிருந்தார் சீதா. சென்னை சாலி கிராமத்தி
லுள்ள இவருடைய வீட்டின் மொட்டை மாடியில் பரந்து விரிந்திருந்த அந்தத் தோட்டத்தில், எந்தப் பக்கம் திரும்பினாலும் பசுமை பளிச்சிடுகிறது. கத்தரி, புடலை, பீர்க்கை, பாகற்காய், பூசணி, அவரை, சுண்டை போன்ற காய்கறிச் செடிகள். கொய்யா, சாத்துக்குடி, அத்திப்பழம், மாதுளை போன்ற பழமரங்கள்... பாலக் கீரை, முளைக் கீரை, அகத்திக்கீரை போன்ற கீரை வகைகள்… துளசி, கற்பூரவல்லி, முடக்கத்தான் முதலான மூலிகைகள்... பல நிற செம்பருத்திச் செடிகள், மனதை அள்ளும் மல்லி, இருவாட்சி, முல்லை பூச்செடிகள் என்று பார்க்கவே அத்தனை பூரிப்பாக இருக்கிறது.

x