அம்மா தான் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க! - ‘அழகு’ சஹானா பேட்டி


பகத்பாரதி
readers@kamadenu.in

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அழகு’ நெடுந்தொடரில் ‘காவ்யா’ கதாபாத்திரத்தில் வரும் சஹானா, தமிழ் ரசிகக் குடும்பங்களின் நேசத்துக்குரிய சுட்டிப் பெண். ‘அழகு’ தொடரிலிருந்து விலகிய சஹானா, ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும்  அந்தத் தொடரில் இணைந்திருக்கிறார். இசைக் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் இந்த இளம் நாயகியுடன் ஒரு பேட்டி:

நடிப்புத் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?

எனக்குச் சின்ன வயசுல இருந்தே நடிக்கிறதுல ஆர்வம். டிவியில வர்ற காட்சிகளைப் பார்த்து அதே மாதிரி நடிச்சிட்டு இருப்பேன். என்னோட குடும்பத்துல எல்லோரும் இசைத் துறையில இருக்கிறவங்க. நான் மட்டும் வித்தியாசமா நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அதனால யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணலை. ஆனா, எனக்கு நடிக்கணும்கிறது மிகப் பெரிய கனவு. அதனால பலரோட எதிர்ப்பையும் மீறி நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

எப்படி வாய்ப்புக் கிடைச்சது?

எங்க வீட்ல என்னோட அம்மா மட்டும்தான் என்னோட நடிப்பு ஆர்வத்துக்கு உறுதுணையா இருந்தாங்க. நான் பொதுவாவே யார்கிட்டேயும் கலகலன்னு பேச மாட்டேன். அமைதியா இருப்பேன்.   “நீ நடிக்கணும்னு சொல்ற… ஆனா, மத்தவங்க கூட சகஜமாப் பேச மாட்டேங்கிற...அப்புறம் எப்படி நடிக்க முடியும்?”னு அம்மா கேட்டாங்க.  “அதெல்லாம் சமாளிச்சிடுவேன். நடிப்புதான் என்னோட கனவு”ன்னு அம்மா கிட்ட சொன்னேன். உடனே மூணு படங்களோட டிவிடி வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுத்தாங்க.  “இந்தப் படங்களைப் பாரு… பார்த்துட்டு நான் சொல்ற கேரக்டரை நீ நடிச்சுக் காட்டணும். அப்படி நடிச்சா உன் கனவுக்கு நானும் தோள் கொடுக்கிறேன்”னு சொன்னாங்க. அம்மா சொன்ன கதாபாத்திரத்தை நடிச்சுக் காட்டினேன். அப்ப இருந்தே அம்மா எனக்கு பெரிய சப்போர்ட். அம்மாவுக்கு டி.ஆர் சாரைத் தெரியும். அம்மா சொன்னாங்கன்னு என் போட்டோவை டி.ஆர் சாருக்கு அனுப்பி வச்சிருந்தேன். நான் இன்னாரோட பொண்ணுன்னு தெரியாமலேயே என்னை செலக்ட் பண்ணிட்டார்.

'ஒருதலைக் காதல்'னு அவர் எடுத்த படத்துல செகண்ட் ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படம் பாதியிலேயே நின்னுடுச்சு. ஆனா, அந்தப் படம் மூலமா அடுத்தடுத்துப் படம் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

அரை டஜன் படங்கள்ல நடிச்சிருக்கீங்களாமே?

ஆரம்பத்துல படங்களைத் தேர்ந்தெடுக்கிறதுல எனக்குச் சரியான புரிதல் இல்லை. யார் கதை சொன்னாலும் ஓகே சொல்லிட்டு நடிச்சிடுவேன். அதுக்கப்
புறம்தான் சினிமான்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் ‘தாரை தப்பட்டை’, 'சலீம்'னு தேர்ந்தெடுத்து நடிச்சேன். இப்போ வரும் படங்களைத் கவனமாத் தேர்ந்தெடுத்து நடிச்சிட்டு இருக்கேன்.

‘அழகு’ சீரியலைவிட்டு வெளியேறி மறுபடியும் என்ட்ரி கொடுத்துட்டீங்களே?

நான் சினிமாவுல நடிச்சிட்டு இருக்கும்போதுதான் ‘அழகு’ சீரியல்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சுது. அதுல ரேவதி மேடம் நடிக்கிறாங்கன்னு மட்டும்தான் என்
கிட்ட சொன்னாங்க. தவிர, எனக்கு முக்கியமான கதாபாத்திரம்னு சொன்னதாலதான் நடிக்க சம்மதிச்சேன். ஆரம்பத்துல என்னோட கதாபாத்திரம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா, போகப்போக என் கதாபாத்திரம் சும்மா சீன்ல வந்துட்டு போற மாதிரி எனக்குத் தோணுச்சு. முக்கியமான கதாபாத்திரம்னு சொல்லித்தானே நம்மளைக் கமிட் பண்ணாங்க. ஆனா, நாம கதாபாத்திரம் வெளியில தெரியவே இல்லையேன்னு நினைச்சேன்.

ஒருகட்டத்துக்கு மேல, சரி இது நமக்கு வேண்டாம்னு அந்த சீரியலைவிட்டு விலகிட்டேன். அப்புறம், சேனல்ல இருந்து என்கிட்ட பேசினாங்க. “திடீர்னு இந்தக் கேரக்டரை மாத்த முடியாது. நீங்க இந்தக் `காவ்யா' கேரக்டருக்கு செட்டாகிட்டீங்க. என்ன பிரச்னை?”ன்னு கேட்டாங்க. நான் என் தரப்பு நியாயங்களைச் சொல்லவும்,  “சரி உங்க கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்றோம்”னு சொன்னாங்க. அதான் சரின்னு மறுபடியும் அந்த சீரியல்ல நடிக்க சம்மதிச்சேன்.

 ‘அழகு’ சீரியலைத் தவிர்த்து வேற எந்தெந்த சீரியல்கள்ல நடிக்கிறீங்க?

விஜய் டிவியில 'பகல் நிலவு' சீரியல்ல நடிச்சேன். இப்போ மறுபடியும் விஜய் டிவியில ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல்ல நடிச்சிட்டு இருக்கேன். ரெண்டு படங்கள்ல நாயகியா நடிச்சிருக்கேன். அந்தப் படங்களோட ரிலீஸூக்காக வெயிட்டிங்.

நீங்க மியூசிக் டீச்சராமே?

அம்மா தம்புரா வாசிப்பாங்க. நான் ஏழாவது படிக்கிற சமயத்துலேயே வாய்ப்பாட்டு பாட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பேன். காலேஜ் பசங்களுக்கெல்
லாம் பாட்டு சொல்லிக் கொடுத்திருக்கேன். இப்போ வரைக்கும் அது தொடர்ந்துட்டுதான் இருக்கு. இசை மட்டுமில்ல, இசையைக் கற்றுக்கொடுப்பதும் இனிமையான விஷயம் தான்.

x