உலகம் சுற்றும் சினிமா - 16: மவுன மொழியில் ஒரு மர்மக் காதல்


2004-ல் கொரிய மொழியில் ‘பின்-ஜிப்’ என்ற பெயரில் வெளிவந்த இத்திரைப்படம் சர்வதேச அரங்கில் ‘3 அயர்ன்’ என்ற பெயரில் வெளியானது. ‘பின்-ஜிப்’ என்றால் காலியான வீடு என்று அர்த்தம்.

படத்தின் நாயகனான டி-சக் ஒரு விநோதத் திருடன். பகல் முழுக்க வீடுகளின் சாவித் துவாரத்தின் மீது விளம்பர நோட்டீஸ்களை ஒட்டுவான். நள்ளிரவில் நோட்டீஸ்கள் கிழிக்கப்படாத வீடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பூட்டை உடைத்து அந்த இரவை அந்த வீட்டிலேயே கழிப்பான். பழுதாகியுள்ள பொருட்களைச் சரிசெய்வான். எகிப்திய பாடகி நட்டாஷா அட்லசின் ‘கஃவ்சா’ படலை ஒலிக்கவிட்டு, வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளைத் துவைத்துப்போடுவான். அந்த வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்டுவிட்டு இறுதியாக அந்த வீட்டில் இருக்கும் பொருட்களின் முன் நின்று கேமராவில் படம் எடுத்துக்கொள்வான்.

அடுத்த நாள் பகல் முழுவதும் நகரின் வேறு பகுதியில் நோட்டீஸ் ஒட்டுவான். இரவில் பூட்டு உடைப்பு, நட்டாஷா அட்லசின் பாடல், துணி துவைத்தல், தூக்கம், அடுத்த வீடு. ஆனால், எந்த வீட்டிலும் எதையும் திருட மாட்டான். இதுதான் டி-சக்கின் வாழ்க்கை. ஓர் இரவில், பெரிய வீடு ஒன்றில் நுழையும் டி-சக், அங்கே ஒரு பெண் இருப்பது தெரியாமலேயே தனது வேலைகளைத் தொடர்வான். தன் கணவனால் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கும் சன்-ஹா, டி-சக்கின் செயல்களைத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கவனிப்பாள். ஒருகட்டத்தில் அவள் இருப்பதைக் கவனித்துவிடும் டி-சக், உடனே வீட்டை விட்டு வெளியேறுவான்.

சன்-ஹா தனது கணவனால் வன்கொடுமையில் சிக்கித் தவிக்கிறாள் என்பதை அறியும் டி-சக், மீண்டும் அவள் வீட்டுக்குச் சென்று அவளுடைய கணவனை கோல்ஃப் பந்துகளால் தாக்கிவிட்டு அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவான். அவனுடன் சேர்ந்து வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவது தொடங்கி இரவில் பூட்டை உடைத்து உள் நுழைவது வரை எல்லாவற்றையும் செய்வாள் சன்-ஹா.

நாளடைவில் அவர்களுக்குள் நேசம் அரும்பி, காதலாக மலரும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் போலீஸிடம் இருவரும் மாட்டிக்கொள்வார்கள். சன்-ஹா அவளின் கணவனிடம் ஒப்படைக்கப்படுவாள். டி-சக் சிறையில் அடைக்கப்படுவான். சிறையில் மனிதர்களின் கண்களில் சிக்காமல் நழுவி நகரும் திறமையை வளர்த்துக்கொள்ளும் அவன், விடுதலையான பின்பு சன்-ஹாவைத் தேடி வருவான். தான் கற்றுக்கொண்ட வித்தையால் சன்-ஹாவின் கணவனுக்குத் தெரியாமலேயே அவளுடன் அதே வீட்டில் வசிக்க ஆரம்பிப்பான். அவளது கணவன் ஊருக்குப் போகும் ஒரு நாளில் இந்த ஜோடி இணைவதுடன் படம் நிறைவடையும்.

நடைமுறை வாழ்க்கைக்கு முரணாக இருந்தாலும் டி-சக்குக்கும் சன்–ஹாவுக்கும் இடையில் இழையோடும் நேசமானது, நியாய அநியாயங்களின் கற்பிதங்களைக் கடந்து இரு ஜீவன்களுக்கு இடையேயான பரஸ்பர வாஞ்சையின் பெருவெள்ளமாகப் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவ்வெள்ளத்தில் இந்தச் சமூகத்தின் நடைமுறைகள், சட்ட திட்டங்கள் அனைத்தும் கரைந்தோடிவிடும்.
இப்படத்தில் இருவருக்கும் இடையே இருக்கும் நுட்பமான உறவை, வசனங்களே இல்லாமல் காட்சியின் வழியாகவே காட்டியிருப்பார் இயக்குநர் கிம்-கி-தக். படத்தின் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களும் தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் சன்-ஹா தன் கணவனுக்குப் பின்னால் அவனுக்குத் தெரியாமல் நிற்கும் டி-சக்கிடம் சொல்லும் ‘ஐ லவ் யூ’ என்ற ஒற்றை வசனம் மட்டும்தான் அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் ஒரே வசனம். அதுவும் தன் மனைவி தன்னைப் பார்த்துத்தான் சொல்கிறாள் என்று சன்-ஹாவின் கணவன் நினைத்துக்கொள்வான்.

கிம்-கி-தக் பெரும்பாலும் தன் படங்களில் வசனங்களைத் தவிர்த்துவிட்டு காட்சிமொழி வாயிலாகவே திரைக்கதையை நகர்த்திச் செல்வார். கொரிய மொழி தெரியாதவர்கள்கூட சப்-டைட்டிலின் சகாயம் இல்லாமலேயே அவரது படங்களின் நுட்பமான கதைக் களத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவரது இன்னொரு படமான ‘மொபியஸ்’ (2013), முழுக்க முழுக்க வசனங்களைத் தவிர்த்துப் படமாக்கப்பட்டது.

உலக அரங்கில் ‘புதிய அலை’ சினிமாவில் கொரியத் திரைப்படங்கள் தங்களுக்கான முத்திரையைப் பதித்துவருகின்றன. அம்முயற்சியில் உலகுக்குக் கிடைத்த ஒரு சினிமா மேதைதான் கிம்-கி-தக். சமூகத்துக்கு முரணான ஓர் உறவையும், அந்த உறவு இருவரின் வாழ்வில் நிகழ்த்தும் வன்முறையையும், புதிர்த்தன்மை கொண்ட பாணியில் காட்டிய திரைமொழிக்காகக் கிம்-கி-தக்கை உலக சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடினார்கள். வன்முறையை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தும் கிம்-கி-தக்கின் திறமைக்கு அவரின் ‘தி அயில்’ (The Isle, 2013) திரைப்படம் சிறந்த உதாரணம்.

டி-சக் தன் காதலுக்காக மனிதர்களின் கண்களில் சிக்காமல் வாழப் பழகிக்கொண்டான் என்பதுடன் முடிகிறது ‘3 அயர்ன்’. ஒருவேளை நம் உடம்பில் உள்ள ஒட்டுண்ணிகள் போல் நம் வீட்டிலும் நமக்கே தெரியாமல் மனிதர்கள் வாழ்ந்தால்? அப்படிப்பட்ட ஒட்டுண்ணிகளைப் பற்றிய கொரிய சினிமாவைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

x