உலகம் சுற்றும் சினிமா - 15: அடிமைச் சங்கிலியை அறுக்கும் தருணம்!


ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று இன்றைக்கு அழைக்கப்படும் கறுப்பின மக்கள், ஒரு காலத்தில் அமெரிக்காவின் பண்ணையடிமைகளாய் பல கொடுமைகளைச் சந்தித்தவர்கள். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, அமெரிக்க முதலாளிகளின் பண்ணைகளில் ரத்தம் சிந்த உழைத்தவர்கள். மனித உரிமையின் நிழல்கூட அவர்கள் மீது படியாமல் பார்த்துக்கொண்ட அமெரிக்க முதலாளிகள், அவர்களைச் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்படுத்தினர்.

அப்படி ஒரு அடிமையாகப் பல வலிகளைச் சுமந்து, ஒரு அதிர்ஷ்ட தருணத்தில் அடிமைத் தளையிலிருந்து வெளிவருபவன்தான் ஜாங்கோ. தனக்குத் தீங்கிழைத்த கொடூர வெள்ளையர்களைக் கொன்றழிக்கும் அவனது அதிரடி ஆக் ஷன் கதைதான் ‘ஜாங்கோ அன்செயிண்டு’ (Django Unchained- 2012).

குவென்டின் டாரன்டினோவின் இயக்கத்தில் ஜேமி ஃபாக்ஸ், லியார்னாடோ-டி-காப்ரியோ, சாமுவேல் எல் ஜாக்ஸன், கிறிஸ்டோப் வால்ட்ஸ் ஆகியோரின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம், உலகமெங்கும் வசூலை அள்ளியதுடன், ’ஸ்பாகெட்டி வெஸ்டர்ன்’ பட ரசிகர்களையும், டாரன்டினோ ஆராதர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

சாது மிரண்டால்...

1858-ல், டெக்சாஸ் மாகாணத்தில் பனி கொட்டும் ஓர் இரவில் கதை தொடங்கும். இரக்கமற்ற இரண்டு வெள்ளை
யின சகோதரர்களால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கால்நடைகளைப் போல் அழைத்துச்செல்லப்படுவார்கள் கறுப்பின அடிமைகள். அவர்களில் ஜாங்கோவும் ஒருவன். அப்போது அவர்களை இடைமறிக்கும் பல் டாக்டர் கிங் ஷல்ட்ஸ், ஜாங்கோவைத் தான் வாங்கிக்கொள்வதாகக் கேட்பார். மறுக்கும் வெள்ளை சகோதரர்களுக்குத் தோட்டாக்களைப் பரிசளித்துவிட்டு, ஜாங்கோவை அழைத்துச் செல்வார் டாக்டர் கிங்.

ஜெர்மனியைச் சேர்ந்தவரான டாக்டர் கிங், ‘பவுன்ட்டி ஹன்ட’ராகப் (மூக விரோதிகளை வேட்டையாடும் வேட்டைக்
காரர்) பணிபுரிபவர். ஜாங்கோ இதற்கு முன் அடிமையாக இருந்த பண்ணையில் கண்காணிப்பாளர்களாக இருந்த ‘பிரிட்டில் பிரதர்ஸ்’ என்ற மூன்று சகோதரர்கள் உண்மையில், தேடப்படும் குற்றவாளிகள். அவர்களை அடையாளம் காட்டத்தான் ஜாங்கோவை விடுவிப்பார் டாக்டர் கிங்.

ஒருகட்டத்தில் ஜாங்கோவுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்து, தன் ‘வேட்டை’க்குத் துணையாக வைத்துக்கொள்ளும் டாக்டர் கிங், ஜாங்கோவும் அவனது மனைவி புரூம்ஹில்டாவும் பண்ணை முதலாளிகளால் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பண்ணைகளுக்கு அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் என்று அறிந்ததும், புரூம்ஹில்டாவை மீட்க உதவ முன்வருவார். நிறவெறி பிடித்த முதலாளி கால்வின் கேண்டியிடம் (லியார்னாடோ-டி-காப்ரியோ) புரூம்ஹில்டா அடிமையாக இருப்பதை இருவரும் கண்டுபிடிப்பார்கள். பல தந்திரங்கள் செய்து கால்வினின் நம்பிக்கையைச் சம்பாதிக்கும் இருவரும், இறுதியில் அவளைக் காப்பாற்றினார்களா இல்லையா என்பதுதான் கதை.

நடிப்பு ராட்சசர்கள்

ஜாங்கோவாக நடித்திருக்கும் ஜேமி ஃபாக்ஸ், நிறவெறிக்கு ஆளாகும் கறுப்பின மனிதர்களின் மனவேதனையையும், உக்கிரமான போராட்ட குணத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். வசீகர வில்லனாக நடித்த லியார்னாடோ-டி-காப்ரியோ, கால்வின் கேண்டி வேடத்தில் நடிப்பின் புது உச்சத்தைத் தொட்டிருப்பார். அவரின் உதவியாளராக வரும் கறுப்பினத்தவரான சாமுவேல் எல் ஜாக்சன், சக கறுப்பின மனிதர்களையே கடுமையாக வெறுக்கும் அளவுக்கு மோசமான மனிதராக மிக நுட்பமாக நடித்திருப்பார். இறுதிக் காட்சியில் ஜாங்கோவைத் தலைகீழாகத் தொங்கவிட்டு அமைதியாக உரையாடும் காட்சியில் அவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும்.

இப்படிப் பெரும் ஆளுமைகள் இப்படத்தில் நடித்திருந்தாலும் சிறந்த துணை நடிகருக்கான ‘ஆஸ்கர்’ விருதை டாக்டர் கிங் கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ்டோப் வால்ட்ஸ்தான் தட்டிச்சென்றார். டாரன்டினோ இயக்கிய ‘இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ (2009) படத்திலும் கிறிஸ்டோப் வால்ட்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரசியத் தகவல்கள்

1966-ல், வெளியான ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் சினிமாவான ‘ஜாங்கோ’ படத்தின் தலைப்பைப் பயன்படுத்திக்கொண்ட டாரன்டினோ, அந்தப் படத்தின் நாயகனான ஃப்ராங்கோ நீரோவை, கால்வின் கேண்டியின் நண்பராக ஒரே ஒரு காட்சியில் நடிக்க வைத்திருப்பார். “உன் பெயர் என்ன?” என்று ஜாங்கோவிடம் அவர் கேட்க, “Django” என்று சொல்லிவிட்டு, “பெயர் உச்சரிப்பில் ‘D’ எழுத்து சைலன்ட்” என்று பதில் சொல்வான். அவர் புன்னகையுடன் “எனக்குத் தெரியும்” என்பார் அசத்தலாக.
 பழைய ‘ஜாங்கோ’ படத்தின் டைட்டில் பாடலை இப்படத்தில் பயன்படுத்திக்கொண்ட டாரன்டினோ, வழக்கம்போல் தனக்குப் பிடித்தமான வெவ்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்கள், மற்றும் இசைக்கோவைகளையும் படத்தில் சேர்த்துக்கொண்டார். வெஸ்டர்ன் படங்களுக்குத் தன் இசையால் உயிரூட்டிய என்னியோ மோரிக்கோனின் இசை உட்பட!

நடிகர் வில் ஸ்மித்தை மனதில் வைத்துதான் ஜாங்கோ கதாபாத்திரத்தை வடிவமைத்தார் டாரன்டினோ. ஆனால், தன்னைவிட மற்றவர்களுக்குத்தான் வலுவான பாத்திரங்கள் என்று நினைத்த வில் ஸ்மித், இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

வன்முறையும் வாழ்வும்

வன்முறையின் அழகியலுக்காகப் புகழ்பெற்றவரான டாரன்டினோ, வலி மிகுந்த கறுப்பின பண்ணையடிமைகளின் வாழ்க்கைப் பின்னணியில் உருவான இந்தப் படத்தை அட்டகாசமான ஆக் ஷன் வடிவில் தந்து வணிக வெற்றியைப் பெற்றார். 
கறுப்பினத்தவர்கள் மீது பந்தயம் கட்டி நடத்தப்படும் ‘மாண்டிங்கோ சண்டை’, கறுப்பின அடிமைகளை நாய்களை வைத்து வேட்டையாடுவது, அடிமைகளின் காதுகளை அறுத்து அவற்றைப் பந்தயமாக வைத்துச் சீட்டாடுவது என்று நிறவெறியின் அவலங்களை எந்த வித சமரசமும் இன்றி காட்சிப்படுத்தியிருந்தார். பல ஊடகங்களும், சினிமாக்களும் பேசாமல் கள்ள மவுனம் காத்துவந்த இந்த விஷயங்களை எல்லாம் ரத்தமும் சதையுமாய் ‘கமர்ஷியல்’ குடுவையில் அடைத்து ஜனரஞ்சகமான சினிமாவாகக் கொடுத்ததில் அவருக்கு மிகப் பெரிய வெற்றிதான்.

எப்போதுமே, அக்கிரமக்காரர்களால் வீழ்த்தப்பட்டவர்கள் வீறுகொண்டு எழும் தருணங்கள், நம் மனதில் ஓர் உணர்ச்சிப் பிரவாகத்தை உண்டு பண்ணும். அப்படி ஓர் உணர்ச்சிப் பிரவாக ஊற்றாக இந்தப் படத்தை உருவாக்கி நமக்குத் தந்திருக்கிறார் டாரன்டினோ!

மனித மனதில் அடியாழத்தில் இருக்கும் இருண்ட உணர்வுகளைத் தடாலடியான வன்முறையின் மூலம் அதிரடியாகக் காட்சிப்படுத்துவது டாரன்டினோவின் பாணி. அதே உணர்வுகளை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாணியைக் கடைப்பிடிப்பவர் கிம் கி டுக். கொரிய சினிமாவின் திரை ஆளுமையான கிம் கி டுக் இயக்கிய படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

x