பெற்றோர் இறந்துவிட்ட பின் சென்னை புறநகரில் இருக்கும் தனது சொந்த வீட்டை விற்க முயல்கிறார் மலேசியாவில் வசிக்கும் சரவணன் (பிரேம்). அந்த வீட்டில் பேய்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அதை அடிமாட்டு விலைக்கு வாங்க சிலர் முயல்கிறார்கள். வீட்டை விற்றால் கிடைக்கக்கூடிய கமிஷன் பணத்துக்காக, அந்த வீட்டில் பேய் இல்லை என்று நிரூபிக்கும் பணியை ஏற்கிறார் செந்தில் (முனீஷ்காந்த் ராமதாஸ்). இதற்காக உடனடி பணத் தேவையில் இருக்கும் தங்கம் (காளி வெங்கட்), நந்தா (சத்யன்), காளி (திருச்சி சரவணகுமார்) ஆகிய மூவரைச் சேர்த்துக்கொண்டு அந்த வீட்டில் சில நாட்கள் தங்குகிறார். பணத்துக்காக பேய் இருக்கும் வீட்டில் நுழைந்தவர்கள் பேயிடம் சிக்கினார்களா அல்லது தங்கள் இலக்கை அடைந்தார்களா? இதற்கெல்லாம் பதில் சொல்லும் படம் தான் ‘பெட்ரோமாக்ஸ்’
இது ‘அனந்தோ பிரம்மா’ என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக். ரீமேக் படங்களைப் பொறுத்தவரை ஒரிஜினல் படத்தின் நல்ல அம்சங்களை அப்படியே கொடுத்துவிட்டால் போதும். அந்த இலக்கில் பாதி கடலைக் கடந்திருக்கிறார் ரோஹின் வெங்கடேசன்.
பேய்களை அறிமுகம் செய்யும் காட்சியில் யார் உண்மையான பேய் என்பதை ஒரு சின்ன ட்விஸ்டுடன் சொன்ன விதம் எதிர்பார்ப்புடன் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், அதற்குப் பிறகு திரைக்கதை நகைச்சுவைக்குத் தடம் மாறுகிறது. சிரிக்க வைக்க முயலும் காட்சிகள் முதல் பாதியை நிறைக்கின்றன. ஆனால், சிரிப்புதான் வரவில்லை.
பயம் வந்தால் சிரிப்பது, இரவு 9 மணி ஆகிவிட்டால் குடித்துவிட்டு மட்டையாகிவிடுவது, மாலைக் கண் மற்றும் செவித் திறன் குறைபாடு உள்ளவர், நடிகனாக விரும்பி திரைப்பட கதாநாயகர்களைப் போல் மிமிக்ரி செய்பவர் எனப் பேய் வீட்டுக்குள் நுழையும் நால்வருக்கும் ஒவ்வொரு விசித்திர குணம் இருக்கிறது. இதனால் அவர்கள் தங்களை அறியாமல் பேயிடமிருந்து தப்பிப்பதும் அதனால் பேய்கள் கடுப்பாவதும் இரண்டாம் பாதியை கலகலப்பாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது.