உலகம் சுற்றும் சினிமா - 12: ஏழ்மையின் இருளில் ஒரு வாழ்க்கைப் பயணம்


இந்தியாவில் மெலோடிராமா பாணியிலேயே திரைப்படங்கள் வந்துகொண்டிருந்த சமயத்தில், 1955-ல், வங்க மண்ணிலிருந்து வந்த ஒரு யதார்த்தப் படம் இந்திய ரசிகர்களின் மனசாட்சியை உலுக்கியெடுத்தது. மெல்ல மெல்ல சர்வதேச விமர்சகர்களின் கவனத்தைப் பெறத் தொடங்கிய இந்தப் படம், இந்திய ஏழைகளின் அவல வாழ்க்கை குறித்த புதிய பார்வையை உலகுக்கு வழங்கியது. அதுதான் சத்யஜித் ராய் இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’.

இந்திய கிராமங்களில் மனித வாழ்க்கை எத்தனை அவலத்துக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும், இளமையில் வறுமை எனும் கொடுமையை அனுபவிக்கும் சிறார்கள் குறித்த சித்திரத்தையும் உருவாக்கிய இந்தப் படம், மூன்று பாகங்களாக விரிவடைந்தது. பதேர் பாஞ்சாலியின் தொடர்ச்சியாக ‘அபராஜிதோ' (1956), ‘அபுர் சன்சார்’(1959) ஆகிய படங்கள் வெளிவந்தன. இம்மூன்று படைப்புகளும் சேர்ந்து ‘அப்பு ட்ரைலஜி’ என்று அழைக்கப்படுகின்றன.

வறுமை வாழ்க்கை

வங்காளத்தின் கடைக்கோடி கிராமத்தில் வாழும் ஏழை புரோகிதரான ஹரிஹர் ராயின் மகன் அப்பு. வாட்டியெடுக்கும் வறுமைக்கு மத்தியிலும் வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க, அப்புவுக்குத் துணையாக இருப்பவள் அவனது அக்கா துர்கா. தாய்க் கோழி போல் தன்னைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் துர்காவுடன்தான் நாட்களைக் கழிப்பான் அப்பு.
குடும்பத்தைக் கரைசேர்க்க அப்பா வெளியூருக்கு வேலைத் தேடிப் போவார். அவர் திரும்பி வருகையில் காய்ச்சலின் கரம் பிடித்துக்கொண்டு மண்ணுலகை விட்டுச் சென்றுவிடுவாள் துர்கா. மனதளவில் உடைந்துபோகும் அக்குடும்பம் வாராணசி நகருக்குப் புலம்பெயரும் அக்குடும்பத்தின் பயணத்துடன் ‘பதேர் பாஞ்சாலி’ படம் முடிவடையும்.

வாராணசியில் ஒண்டுக் குடித்தன வாழ்க்கை வாழும் அப்புவின் குடும்பத்துக்கு ஆரம்ப நாட்கள் நிம்மதியாகக் கழியும். அங்கு தனது புரோகிதப் பணியைத் தொடரும் ஹரிஹர், தனது குடும்பத்தை ஓரளவு சந்தோஷமாகவே வைத்திருப்பார்.

ஒருகட்டத்தில், துன்பத்தின் கொடுங்கரம் இந்த எளிய குடும்பத்தை இறுக்கத் தொடங்கும். ஹரிஹர் காய்ச்சல் கண்டு இறந்துவிட, அப்புவும் அவன் அம்மாவும் வங்கத்துக்கே திரும்புவார்கள். அம்மா கூலி வேலை பார்க்க, அப்பு புரோகிதம் பார்க்க ஆரம்பிப்பான். ஆனால், படிப்பின் மீது ஆர்வம் கொண்ட அப்புவைக் கல்வி இறுகப் பற்றிக்கொள்ளும். ஸ்காலர்ஷிப் பெற்று கொல்கத்தா சென்று படிக்க ஆரம்பிப்பான். ஊரில் நோய்வாய்ப்படும் அம்மா, மகன் இல்லாத ஏக்கத்தில் வாடிக்கொண்டிருப்பார். அப்பு திரும்பி வருவதற்குள் அம்மா இறந்துவிடுவார். தனியாளாகும் அப்புவைத் தன்னுடன் புரோகிதம் பார்க்கச் சொல்வார் அவனது மாமா. ஆனால், அதை நிராகரித்துவிட்டு தன் படிப்பைத் தொடர கொல்கத்தா நோக்கிப் பயணிப்பதுடன் ‘அபராஜிதோ’ படம் நிறைவடையும்.

மூன்றாவது பாகமான ‘அபுர் சன்சார்’, தனியனாக இந்த உலகத்தை எதிர்கொள்ளும் அப்புவின் வாழ்க்கையைப் பேசும். இன்டர்மீடியட் படிப்புக்கு மேல் படிக்க முடியாத அப்பு, பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் எழுதி ஜீவித்துக்கொண்டிருப்பான். வாழ்வின் புதிர்களின் ஊடாகப் பயணிக்கும் அவன், சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் நண்பனின் தங்கையை மணந்துகொள்வான். மனைவியும் பேறுகாலத்தில் மரணித்துவிட, தனக்குப் பிறந்த மகனைக் கூட பார்க்காமல் நாடோடியாகக் கிளம்பிவிடுவான் அப்பு. வாழ்வின் இருண்ட பக்கங்களை ஒரு பைத்தியக்காரனைப் போல் கடக்கும் அப்பு, கடைசியில் தன் மகன் காஜலிடம்தான் வாழ்விற்கான பேரொளி இருக்கிறது என்பதை உணர்ந்து அவனிடம் போய்ச் சேருவான்.

பிறந்ததிலிருந்து தந்தையையே பார்த்திராத சிறுவன் காஜல், அப்புவைத் தன் அருகிலேயே நெருங்க விட மாட்டான். இறுதியில் அவனை அவன் அப்பாவிடம் கூட்டிச் செல்வதாக பொய் சொல்லி, மகனுக்கு ஒரு நண்பனாக மாறி அவனை தோளில் தூக்கிக்கொண்டு அப்பு பயணிப்பதுடன் ‘அபுர் சன்சார்' முடிவடையும்.

பயணங்களின் தொடக்கம்

நன்றாகக் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு படமும் பயணத்திலேயே முடிவடையும். அந்தப் பயணத்தின் நீட்சி தான் அடுத்த படம். வாழ்வின் அடிப்படைத் தத்துவமே அதுதானே!

மூன்று படங்களுமே பெண்களின் வாழ்க்கையை மிக நுட்பமாகப் பதிவுசெய்தவை. குடும்பத்தின் ஆதார மையமாக இருந்து, உழைத்து, தங்கள் ஜீவனைக் கருக்கிக்கொள்ளும் பெண்களின் வாழ்க்கையைப் பேசியவை. முந்தானையால் வாய் பொத்தி அழும் பெண்களின் ஈன சுவரம், கணவனின் காதுகளை மட்டுமல்ல, பிள்ளைகளின் காதுகளையும் எட்டுவதில்லை என்பதைச் சமரசம் இல்லாமல் பதிவுசெய்திருப்பார் சத்யஜித் ராய். அப்புவின் அம்மா, 90 வயதைக் கடந்த பாட்டி, எந்த ஊருக்குப் போனாலும் ஆபத்துக்கு உதவும் பக்கத்து வீட்டுப் பெண்கள், அப்புவின் மனைவி என்று எல்லா பெண்களிடமும், மற்றவர்களுக்குச் சொல்ல சில கதைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

சர்வதேச அங்கீகாரம்

‘பதேர் பாஞ்சாலி' திரைப்படம் சர்வதேச அரங்கில் பல விருதுகளை அள்ளியது. பெர்லின் திரைப்பட விழா, கேன்ஸ் திரைப்பட விழா, பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் என்று அனைத்து இடங்களிலும் இந்தப் படத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது.

சத்யஜித் ராய்க்கு கவுரவ ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகள் கிடைத்தன. 1955-ல், தன் திரைப் பிரவேசத்தை மேற்கொண்ட ராய், தன் படைப்பு ஓட்டத்தை 1992-ல், நிறுத்திக்கொண்டார். ஒரு சதவீதம்கூட சமரசம் இல்லாமல் சினிமாவைக் கலையாக அணுகும் பாதையில் பயணித்த அந்தத் திரை மேதைதான், உலக சினிமா அரங்கில் இந்தியாவின் முகமாக இன்று வரை திகழ்கிறார்.

x