சைரா நரசிம்மா ரெட்டி - திரை விமர்சனம்


சிப்பாய்க் கலகத்திற்கு முன்பே ஆந்திராவில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்து தூக்கிலிடப்பட்ட உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் கதைதான் படத்தின் ஒன் லைன். வெள்ளையரின் வரி வசூல் முறைக்கு எதிராகப் போராடும் அந்தப் பாளையக்காரர், விவசாயிகளையும் தன் பின்னால் திரட்டுகிறார். அதன் விளைவு என்ன ஆனது என்பதே திரைக்கதை.

உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வரலாறு ஆந்திராவின் எல்லையைக் கடந்து இந்திய தேசத்துக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்திலும் அவரது தியாகமும் புகழும் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த டப்பிங் படம் எடுக்கப்பட்டுள்ளது. நரசிம்மா ரெட்டியின் தவம், வீரம், காதல், குழந்தைத் திருமணம், யாகம், தீபம் ஏற்றுதல் உள்ளிட்ட பல காட்சிகள் வருகின்றன. இவற்றில் சில, கதைக்குச் சம்பந்தமில்லாமல் இருப்பதால் அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்துக்கு சிரஞ்சீவி வலு சேர்த்துள்ளார். தண்ணீருக்குள் தவம் இருக்கும் அமைதியான குணத்திலும், வெள்ளையனை விரட்டும் ஆவேசத்திலும், தமன்னா மீதான அன்பைச் சொல்லும் விதத்திலும், வீரர்களை ஒன்றிணைத்து மக்கள் தலைவனாக உயரும் போதும் மனதில் நிறைகிறார். அரவிந்த்சாமியின் பின்னணிக்குரல் சிரஞ்சீவிக்கு ஆரம்பத்தில் சற்று உறுத்தலாகத் தெரிந்தாலும் போகப்போக அது குறையாகத் தெரியவில்லை.

ஜான்சிராணியாக நரசிம்மா ரெட்டியின் வரலாறைச் சொல்லும் அனுஷ்காவுக்குப் படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை. நரசிம்மா ரெட்டியின் மனைவி சித்தம்மாவாக நயன்தாரா தன் பங்களிப்பை நிறைவாகச் செய்துள்ளார். இவர்கள் இருவரைக் காட்டிலும் தமன்னா நாட்டியக் கலைஞராகவும், சிரஞ்சீவியின் காதலியாகவும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

x