நம்ம வீட்டுப் பிள்ளை - திரை விமர்சனம்


அம்மா, தங்கை, தாத்தா ஆகியோருடன் வாழ்ந்து வரும் சிவகார்த்திகேயன், தனது அப்பாவுக்கு உடன்பிறப்புகள் இருந்தும் அவர்களின் ஆதரவில்லாமல் இருக்கிறார். தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நினைக்கும்போது, திருமணம் நின்று விடுகிறது. சிவகார்த்திகேயனுடன் இருக்கும் முன்பகையை மனதில் வைத்து ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து பழிவாங்க நினைக்கிறார் நட்டி. அது என்ன பகை, சிவகார்த்திகேயன் தன் குடும்பப் பிரச்சினைகளை எப்படி சரி செய்கிறார், தங்கைக்குப் பிரச்சினை என்றவுடன் சிவகார்த்திகேயன் எடுக்கும் முடிவு என்ன என்பதே ‘நம்ம வீட்டுப் பிள்ளை'.

குடும்பத்தை கவனித்துக் கொள்வது, அம்மாவின் மனம் நோகாமல் எடுத்துச் சொல்வது, தங்கையின் மீதிருக்கும் அளவு கடந்த பாசம், உறவுகளுக்காக ஏங்குவது, மாமன் மகள் மீது காதல், தங்கையை அடித்த மாப்பிள்ளையிடம் கோபம் கொள்வது, தங்கை கணவர் செய்த தவறுக்காக முடிவெடுக்கும்போது எனப் பல காட்சிகளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது முக்கியமான படம். அண்ணன் மீது பாசம், கணவரை நம்பி ஏமாறுவது, அண்ணனுக்காக கணவரிடம் சண்டையிடுவது என நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். வழக்கமாக தமிழ் சினிமாவில் உள்ள அண்ணன் - தங்கை காட்சிகள்தான் என்றாலும் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷின் யதார்த்தமான நடிப்பு நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக பாரதிராஜா, அம்மாவாக அர்ச்சனா, காதலியாக அனு இம்மானுவேல், பெரியப்பாவாக வேலராமமூர்த்தி, சித்தப்பாவாக சுப்பு பஞ்சு, மாமாவாக சண்முகராஜன், வில்லனாக நட்டி, ‘ஆடுகளம்' நரேன், ஷீலா, அருந்ததி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. அனைவருமே கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள்.

x