சிலருக்கு சிம்புவை வைத்துப் படம் எடுக்கத் தெரியல!- ‘இருட்டு’ இயக்குநர் வி.இசட்.துரை


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

அந்த வீட்டிற்குள் நுழைந்தால் பகல் நேரத்திலும் படர்ந்திருக்கிறது இருட்டு. கண்ணுக்கு ஒன்றும் புலப்படாமல், ஜன்னல் கண்ணாடி வழியாகத் தீற்றலாகக் கசிந்த சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் சில அறைகளைக் கடந்து சென்றால், ஓர் அறையில் தாடியை வருடியபடி ஐ-போனில் ஆழ்ந்திருக்கிறார் இயக்குநர் வி.இசட். துரை. “என்ன சார்... உங்க அடுத்த படமான ‘இருட்டு’ படத்தோட பாதிப்பா?” என்று கேட்டால், கலகல சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார். பேச்சில் 19 ஆண்டுகால அனுபவம் மிளிர்கிறது.

கடைசியில நீங்களும் பேய்ப் படம் எடுக்க வந்துட்டீங்க போல?

சுந்தர்.சி சாரைக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி சந்திச்சேன். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு பேசுனோம். பேய்ப் படம் ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லு பண்ணலாம்னு சொன்னார். அதுக்காக நான் உருவாக்கினதுதான் ‘இருட்டு’ ஸ்கிரிப்ட். இன்னைக்கு, பேய் படங்கள்னா காமெடிப் படம்னு ட்ரெண்ட் செட் ஆகிடுச்சு. அந்த பாணியில என்னோட படம் இருக்கக் கூடாதுனு தெளிவா இருந்தேன். இது வழக்கமான ஹாரர் மூவியா இல்லாம ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமா இருக்கும்.

x