ஒத்த செருப்பு - திரை விமர்சனம்


கொலை வழக்கு ஒன்றில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் பார்த்திபன். போலீஸ் விசாரணையில், தான் செய்ததாக மேலும் சில கொலைகளையும் பட்டியலிட்டு போலீஸையே மிரளவைக்கிறார். தனக்கே உரிய நக்கல், நையாண்டி பாணியில் விசாரணையை எதிர்கொள்ளும் பார்த்திபனின் ‘ஒன் மேன் ஷோ’தான் ‘ஒத்த செருப்பு’.

இருளும் இல்லாமல், வெளிச்சமும் இல்லாமல் கலவையான வெளிச்சத்தில் இருக்கும் ஒற்றை அறை… தலைக்கு மேல் கர கர சத்தத்தோடு சுற்றும் ஃபேன், திரையை வியாபித்திருக்கும் ஒற்றை மனிதன்... இவற்றை வைத்துக்கொண்டு ஒன்றே முக்கால் மணி நேரத்தை நேர்த்தியாகச் செதுக்கி, ரசிகர்களுக்குப் பந்திவைக்க முடியும் எனக் காட்டியிருக்கிறார் பார்த்திபன். படத்தின் மற்ற பாத்திரங்களின் குரல்கள் பின்னணியில் மட்டுமே ஒலிக்கின்றன. ஆனாலும், சுவாரசியமான கதை சொல்லல், முழுமையான அனுபவத்தை வழங்குகிறது.

இயக்குநர், கதாசிரியராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இந்தப் படத்தின் மூலம் பெரும் பாய்ச்சலைப் பார்த்திபன் நிகழ்த்தி
யிருக்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களின் வசனங்களையும் உணர்ச்சிகளையும் தன் உரையாடல் வழியாகவே வெளிப்படுத்தும் சவாலை மிகச் சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறார்.

செய்த கொலைகளை நடித்துக்காட்டும்போது வெளிப்படும் மூர்க்கம், மனைவி உஷா குறித்து பேசுகையில் மேலெழும் காதல், போலீஸ் விசாரணையை எதிர்கொள்ளும் இடத்தில் எட்டிப்பார்க்கும் மிடுக்கு, தான் போலீஸ் இன்டர்வியூவுக்கு வந்திருப்பதாகத் தன் மகன் மகேஷிடம் சொல்லுமாறு காவலர்களிடம் கேட்கும்போது வெளிப்படும் தந்தையின் பாசம் எனக் காட்சிக்குக் காட்சி தனிக்காட்டு மகாராஜாவாக மிளிர்கிறார் பார்த்திபன்.

x