சமூகசேவைக்காக கால் டாக்ஸி ஓட்டும் கதாநாயகன்!


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

‘சினிமாக்காரர்' - இந்த வார்த்தையைக் கேட்டவுடன், பகட்டான வாழ்க்கை, சொகுசு கார், ஈசிஆரில் பங்களா இத்யாதிகள் அடங்கிய பிம்பம்தான் நம் நினைவுக்கு வரும். திரை நட்சத்திரங்கள் சாமானியர்களிடமிருந்து விலகி நிற்பவர்கள் என்றே நினைத்துக்கொள்கிறோம். ஆனால், திரை வாழ்க்கைக்குப் பின்னால் அசலான மனிதத்துடன் வாழும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அபி சரவணன்.

மக்கள் போராட்டங்களில் முனைப்புடன் பங்கேற்கும் இவர், இயற்கைப் பேரிடரில் இழப்புகளைச் சந்திக்கும் மக்களுக்குக் கரம் கொடுக்கத் தயங்காதவர். மற்றவர்களின் துயரங்களுக்காக வருந்தும் இவரது சொந்த வாழ்விலும் ஏராளமான சோகங்கள்.
லேசான தாடியை வருடியபடியே பேச ஆரம்பிக்கிறார் அபி சரவணன். “பக்கா மதுரக்காரப் பையன் நான். டிப்ளோமா படிக்கும்போதே, சுனாமி நிதி திரட்டுறதுக்காக ‘அறிவுச் சிறகுகள்'னு ஒரு பொது அறிவுப் புத்தகம் எழுதி, என்கூட படிக்கிற மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கிறவங்ககிட்ட அதை வித்து 70,000 ரூபாய்க்கு மேல் திரட்டிக்கொடுத்தேன். அப்புறம், இன்ஜினீயரிங் முடிச்சு, கேம்பஸ் இன்டர்வியூ மூலமா பெங்களூருல ஒரு நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே நடந்த ஒரு சம்பவம்தான் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு.

அங்க என்கூட வேலை செஞ்சவர்கூட சின்ன வாக்குவாதம். ‘இந்த ஹீரோயிஸத்தை எல்லாம் உன்னால முடிஞ்சா சினிமாவுல காட்டு’னு அவர் சொல்லிட்டார். அது என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. ‘ஏன் என்னால முடியாதா?’னு எனக்குள்ள ஒரு உத்வேகம் வந்துச்சு. அப்பவே சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்புத் தேட ஆரம்பிச்சேன்.

x