கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
“அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்’’ என சீமான் கொளுத்திப் போட்டிருந்த சமயத்தில் பேட்டிக்காகத் அவரைத் தொடர்பு கொண்டபோது, “பி.வி.சிந்து தங்கம் வென்றால் பாராட்டு குவிகிறது. அதே தங்கத்தைத்தானே நம் மகள் இளவேனில் வாலறிவனும் பெற்றார்? அவர் தாயகம் திரும்பும்போது தமிழக விளையாட்டுத் துறை மிகப் பெரிய வரவேற்பு கொடுத்திருக்க வேண்டாமா? ச்சே… என்ன ஆட்சியாளர்களே..." என்று ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார். தொடர்வது அவரது பேட்டி.
"இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பதாக அரசு நம்பிக்கை அளித்து ஏமாற்றிவிட்டது" என்று இலங்கை எம்பி-யான சுமந்திரன் சொல்லியிருக்கிறாரே?
எந்தக் காலத்திலும் சிங்களர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க மாட்டார்கள் என்பது நமக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். அதிகாரப் பகிர்வு தருவார்கள் என்று சொல்லி கூட்டணிக்குச் செல்வது, அடுத்த தேர்தல் நெருங்கும்போது, ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்வது எல்லாமே கண்துடைப்பு. அவ்வளவு வலிமையாக நின்று நாம் போராடிய காலத்திலேயே தர முடியாது என்று சொன்னவன், இப்போது எப்படித் தருவான்? சரி, ஏமாற்றிவிட்டார்கள். இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? சிங்களக் கட்சிகளை எதிர்த்து அவர்களோடு கூட்டணி போடாமல் நிற்கப்போகிறீர்களா. எப்படியும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துத்தானே நிற்கப் போகிறீர்கள்? இதெல்லாம் வீண் பேச்சு.