பக்ரீத்- திரை விமர்சனம்


வறண்ட தன்நிலத்தில் விவசாயம் செய்து முன்னேற துடிக்கும் விக்ராந்துக்கு ஒரு ஒட்டகக்குட்டி கிடைக்கிறது. அதன்மீது அவரது மொத்தக் குடும்பமும்   அன்பைச் செலுத்த, புதிய வாழ்க்கைச் சூழலும், உணவும் பிடிக்காமல் சோர்ந்து போகிறது ஒட்டகம். இதனால் ராஜஸ்தானில் ஒட்டகக் கூட்டத்தோடு கொண்டுவிட முடிவெடுக்கும் விக்ராந்துக்கும், அந்த ஒட்டகத்துக்கும் இடையேயான பாசப்போராட்டமே ‘பக்ரீத்’ படத்தின் மையக்கரு.

ஒரு பக்ரீத்துக்கும், அடுத்த பக்ரீத்துக்கும் இடையேயான காலத்தில் நகரும் கதைக்களத்தில் மனிதம் சுமக்கிறது படம்.‘குழுவுல இருந்து போனாலே பேங்காரங்க லேட்டாத்தான் அனுப்புவாங்க’ என்பது உள்ளிட்ட சில இடங்களில் வசனங்கள் யதார்த்தம் பேசுகின்றன.

நொடிந்துபோன  விவசாயியாக  தாடியுடன்  வரும்போதும், கடன் வாங்கி நம்பிக்கையோடு விவசாயம் செய்யும் போதும் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ராந்த். அதிலும் ஒட்டகத்தோடு அவர் வட இந்தியாவில் பயணிக்கும் காட்சிகளிலும், ஒட்டகத்தோடு இருக்கும் பிணைப்பைக் காட்டும் காட்சிகளிலும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

விக்ராந்தின் மனைவியாக வரும் வசுந்தரா மிக நேர்த்தியாக நடித்துள்ளார். ஒரு குழந்தையின் அம்மா, கிராமத்து இல்லத்தரசி, கால்நடை, வயல்வெளிகளின் ஊடான வாழ்க்கை என வலுவான பாத்திரத்தை மிக அழகாக நகர்த்திய விதத்தில் கவனிக்க வைக்கிறார். புதிதாக வாங்கிவந்த மாட்டுக்கு மகள் ‘க்ரிஷ்’ எனப் பெயர் வைத்த அடுத்த நொடியில் “க்ரிஷ் தண்ணி குடிடா” 
எனத் தண்ணீர் காட்டும் இடத்தில் கிராமத்து மிடுக்கு.

x