இனி என் வீட்டில் கலைஞானம்... - நெகிழவைத்த ரஜினி!


டி.செல்வகுமார்
selvakumar.t@hindutamil.co.in

‘கலைஞானத்துக்கு வீடு வாங்கித் தரும் ரஜினிகாந்த்’ என்பதுதான் இப்போது பேசப்படும் விஷயமாகியிருக்கிறது. பழைய நண்பர்கள், திரையுலகில் தன்னுடைய உயர்வுக்குக் காரணமாக இருந்தவர்கள் என்று தன் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஒருபோதும் தயங்கியதில்லை ரஜினி. அவரது அரசியல் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிப்பவர்களிடம் கூட, அவரது இந்தப் பண்பே பாராட்டுகளைப் பெற்றுத் தந்துவிடுகிறது. அதற்கு ஆகஸ்ட் 14-ல் சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞானத்திற்கு நடந்த பாராட்டு விழாவும் உதாரணம். இந்த விழாவில் தான் கலைஞானத்துக்கு வீடு பரிசளிப்பதாக அறிவித்தார் ரஜினி. அவரது நன்றியுணர்ச்சிக்குப் பாத்திரமாகி யிருக்கும் கலைஞானம் – ரகளையான, ரசனையான மனிதர்!

பாலசந்தர், மகேந்திரன் போன்ற இயக்குநர்களால் உருவாக்கப்பட்டவர் ரஜினி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையைத் தந்தவர் கலைஞானம்தான். 90 வயதாகும் இந்த மூத்த கலைஞருக்கு தயாரிப்பாளர், நடிகர், கதாசிரியர் என பலமுகங்கள் உண்டு. கலைஞானத்தின் இயற்பெயர் கே.எம்.பாலகிருஷ்ணன். 20 வயதுக்குள்ளாகவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமாக்களை பார்த்தவர். சினிமா பார்க்க காசில்லாத போது தியேட்டரில் முறுக்கு விற்றுக் கொடுத்து அதற்கான கூலியை சினிமா டிக்கெட்டுக்காக எடுத்துக்கொள்ளச் சொன்ன கலாரசிகன். ஒருகட்டத்தில், கோபாலகிருஷ்ணன் என்ற பெயரை கலைஞானம் என்று தானே மாற்றிக் கொள்ளும் அளவுக்கு கலைப்பித்தர் ஆகிப் போனார் .

‘ரஜினிதான் ஹீரோ!’

x