த்ரிஷாவுக்காக கதையில் மாற்றம் செய்தேன்- ‘கர்ஜனை’ இயக்குநர் சுந்தர் பாலு


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

காதல் ததும்பும் கண்களுடன் ‘96’ படத்தில் அனைவரையும் வசீகரித்த த்ரிஷா, அடுத்து ‘கர்ஜனை’ படத்தில் கலங்கடிக்கும் அதிரடிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அழகுப் பதுமையை ஆக்‌ஷன் ஹீரோயினாக்கியிருக்கும் இயக்குநர் சுந்தர் பாலுவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினேன். பட வேலைகளில் மும்முரமாக இருப்பவர், களைத்துச் சிவந்த கண்களுடன் கலகலவென்று பேசுகிறார்.

உங்க திரையுலகப் பயணம் பற்றிச் சொல்லுங்க?

அப்பா பாலு சினிமாவில் ஆர்ட் டைரக்டரா இருந்தவர். அதனால, சின்ன வயசிலயிருந்தே சினிமா ஆர்வம் எனக்கு இருந்துச்சு. வீட்டுப் பக்கத்திலேயே நிறைய ரெக்கார்டிங் ஸ்டுடியோ உண்டு. முதல்ல பாட்டு பாடத்தான் வாய்ப்புத் தேடினேன். சங்கீதம் முறையா கத்துக்காத காரணத்தால வாய்ப்புக் கிடைக்கல. அப்புறம், கதையில கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். டெலிஃபிலிம் பண்ணினேன். அப்டியே விளம்பரப் படங்கள் பக்கம் போனேன். இதுக்காகவே ஹைதராபாத்துல ஏழு வருஷம் இருந்தேன். இப்படியே இருந்துடக் கூடாதுன்னு சென்னைக்குத் திரும்பி வந்து வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். ஒருவழியா ‘கர்ஜனை’ வாய்ப்பு அமைஞ்சது.

x