தொரட்டி - திரை விமர்சனம்


விவசாய நிலங்களில் ஆட்டுக் கிடைபோட்டு பிழைக்கும் கீதாரி நல்லசிவன் (அழகு). அவரது மகன் மாயன் (ஷமன் மித்ரு) ஊரில் வழிப்பறி செய்து பிழைப்பு நடத்தும் மூன்று திருடர்களின் சகவாசத்தால் தீய பழக்கங்களுக்கு ஆளாகிறான். உறவினர் மகளான செம்பொன்னு (சத்யகலா), பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாயனைத் திருமணம் செய்துகொண்டு அவனைத் திருத்த முயல்கிறார். மாயனுடன் சுற்றித் திரிந்த திருடர்கள் மூவரும் காவல்துறையில் சிக்கவும் அவரே காரணமாகிறார். இதனால் அவர்கள் செம்பொன்னைப் பழிதீர்க்க நினைக்கிறார்கள். மாயன் நல்வழிக்குத் திரும்பினானா, அவனும் செம்பொன்னும் நிம்மதியாக வாழ்ந்தார்களா, திருடர்களின் பழிவெறி என்ன ஆனது? என்பதே தொரட்டியின் மீதிக் கதை.

ராமநாதபுரம் மாவட்ட கிராமம் ஒன்றில் 1980-களில் நடக்கும் கதை. அந்தக் காலகட்டத்தையும் அப்போதைய கிராமங்களையும் அங்கு வாழ்ந்த ஈரம் மிக்க மனிதர்களையும் அப்படியே கண் முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் பி.மாரிமுத்து. கிடை போட்டுப் பிழைக்கும் கீதாரிகளின் வாழ்க்கை உள்பட நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் கேள்விபட்டேயிராத கிராமத்து வாழ்வியல் அம்சங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் திரையில் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறார். இதற்காகவே இயக்குநரையும் அவருக்குத் துணை நின்ற படக்குழுவையும் பாராட்ட வேண்டும்.

கதையில் கவனிக்கத்தக்க புதுமையோ சுவாரசியமோ இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத கதைக்களமும் கதாபாத்திரங்களும் அவர்களது செயல்களும் திரையிலிருந்து கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. வசனங்களில் தெற்கத்தி கிராமத்துப் பேச்சு வழக்கு அவ்வளவு இயல்பாகப் பதிவாகியிருக்கிறது. ‘தாயத் தள்ளினாலும் தண்ணியத் தள்ளக் கூடாது’ என்பது போன்ற சொலவடைகள் பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டு காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றன.

இவற்றை எல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் இது சாதாரண பழிவாங்கும் கதைதான் என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. இடைவேளையின்போதே படத்தின் முடிவை ஊகித்துவிட முடிவது மிகப் பெரிய பலவீனம். கடைசி 15 நிமிடங்கள், தேவை இல்லாமல் படம் நீண்டுகொண்டே போவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

x