மூத்த மகன் கிருபாகரன் செய்யும் சேட்டை, இம்சைகளால் பல இடங்களில் சமுத்திரக்கனிக்கு தலைகுனிவு ஏற்படுகிறது. திருத்தும் முயற்சியில் அடித்து வளர்க்கும் தந்தை மீது விரோதம் கொண்டே வளர்கிறான் கிருபாகரன். இந்நிலையில் சமுத்திரக்கனியும், அவரது மனைவி சங்கவியும் ஒரு பிரச்சினையில் பிரிந்துவிட இதுதான் சான்ஸ் என அம்மாவோடு போய்விடுகிறான் கிருபா. அவன் தந்தையின் பாசத்தை உணர்ந்தானா... தம்பதியர் மீண்டும் இணைந் தார்களா? என்பதுதான் ‘கொளஞ்சி.'
கிருபாகரன் - நசாத் கூட்டணி செய்யும் ரகளைகள் ரசிக்க வைக்கின்றன. சிறுவயதில் விளையாடிய பொழுதுகளையும் அசைபோட வைக்கிறது. அதில் நசாத் அரைகுறை ஆங்கிலத்தில் பேசும் காட்சிகளில் திரையரங்கில் சிரிப்பலை. இருவர்
மட்டுமே மொத்தப் படத்தையும் தூக்கிச் சுமக்கின்றனர்.
கிருபாகரன் பாத்திரத்தை உணர்ந்து நிறைவான பங்களிப்பை வழங்கியுள்ளார். பதின் பருவத்தில் தந்தையின் அடக்குமுறையை அணுகும் பால்யத்தின் மனநிலையை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். “அப்பாசாமிங்கிற பேரை சுருக்கித்தான் அப்பான்னு கூப்பிடுறேன்”னு சொல்வதில் தொடங்கி, பல காட்சிகளில் வெகு இயல்பாக ஸ்கோர் செய்கிறார் கிருபா.
பகுத்தறிவு பேசும் அப்பா பாத்திரத்தில் சமுத்திரக்கனி. பையனை உருட்டி மிரட்டும்போதும் சரி... அவனை ஏக்கத்தோடு பார்க்கும்போதும் சரி நடுத்தர வயது அப்பாக்களை அப்படியே பிரதிபலிக்கிறார்.