உலகம் சுற்றும் சினிமா - 1: திரைக்கதையில் ஜாலம் செய்த டாரன்டினோ


திரைப்படங்கள் பல விதம். உள்ளூர் சந்தைக்காக எடுக்கப்படும் படங்கள் தொடங்கி, சர்வதேசப் பார்வையாளர்களைக் குறிவைக்கும் வணிக சினிமா வரை பல வகைகள் உண்டு. உலகெங்கும் உள்ள பொதுவான அம்சங்களைக் கலை வடிவில் கொண்டுவருவதன் மூலம் சர்வதேசப் பார்வையாளர்களிடம் நேரடியாக உரையாடும் படங்கள், உள்நாட்டுப் பிரச்சினைகள், தனித்த கலாச்சாரக் கூறுகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம் முற்றிலும் அந்நிய நாடுகளின் ரசிகர்களிடம் புதிய பார்வையை, தாக்கத்தை ஏற்படுத்தும் படங்கள் போன்றவற்றை சர்வதேச அளவிலான கலைத் திரைப்படங்களாக நாம் கருதலாம். சினிமா ஆர்வலர்களின் மொழியில் சொன்னால், ‘உலக சினிமா’. புகழ்பெற்ற உலக சினிமாக்களை சுவாரசியமாக அறிமுகம் செய்யும் புதிய தொடர் இது.

 ‘பல்ப் ஃபிக் ஷன்’(1994) - வழக்கமான அட்வெஞ்சர், ஆக் ஷன் படங்களில் மூழ்கியிருந்த ஹாலிவுட்டைப் புரட்டிப்போட்ட வித்தியாசமான படைப்பு. இன்றளவும் அதன் அட்டகாசமான கதை சொல்லலுக்காகவும், திரைமொழிக்காகவும் திறமை வாய்ந்த நடிப்புக்காகவும் கொண்டாடப்படும் ‘கல்ட்’ படம். தனது முதல் படமான ‘ரிசர்வாய்ர் டாக்ஸ்’ மூலம் கவனம் ஈர்த்திருந்த குவென்டின் டாரன்டினோ அடித்த அடுத்த சிக்ஸர் இது.

 1963-ல், வெளிவந்த ‘பிளாக் சபாத்’ எனும் திகில் படத்தின் பாதிப்பில் ஒரு ஆந்தாலஜி பாணி படமாக இதை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் டாரன்டினோ. வெவ்வேறு கதைகள் கொண்ட குறும்படங்களின் தொகுப்பை ஆந்தாலஜி படங்கள் என்கிறார்கள். கதைகளுக்குள் ஏதேனும் வகையில் ஒரு தொடர்பு இருக்கும். ஆனால், பலரும் கருதிக்கொண்டிருப்பதுபோல் ‘பல்ப் ஃபிக் ஷன்’ ஆந்தாலஜி வகை படம் அல்ல. நான் லீனியர் பாணி கதை சொல்லலில், கதையின் சம்பவங்களை முன்னும் பின்னுமாக மாற்றியமைத்து திரைக்கதையில் ஜாலம் புரிந்திருப்பார் டாரன்டினோ.

படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர், டாரன்டினோவைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். மனிதர் படு ரகளையான கலைஞர். வெறித்தனமான சினிமா ரசிகர். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் படங்கள் முதல் ஹாரர் படங்கள் வரை எதையும் விட்டுவைக்க மாட்டார். அவர் ரசித்த படங்களின் பாதிப்புகள் அவரது ஒவ்வொரு படத்திலும் இருக்கும். ‘ட்ரிபியூட்’ எனும் வகையில் பல முன்னோடிப் படங்களுக்குத் தனது படங்களில் மரியாதை செய்பவர் இவர்.

பிடித்த பாடல்கள், தீம் இசைக் கோவைகள் என்று எல்லாவற்றையும் (முறையான அனுமதியுடன்தான்!) பயன்படுத்திக்கொள்வார்.
தன் படங்களை யாரேனும் தழுவிப் படமெடுத்தாலும், தரமாக வந்திருந்தால் கூப்பிட்டுவைத்துப் பாராட்டவும் செய்யும் படு வித்தியாசமான பாணி இவருடையது. வன்முறையின் அழகியலைத் திரையில் மிக நுட்பமாகச் சித்தரிப்பவர் இவர். ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளின் பின்னணி

யில் படு மெலோடியான பாடல்களை ஒலிக்கவிடுவார். உலக அளவில் இவரது பாதிப்பில் படங்களை இயக்கும் இயக்குநர்கள் ஏராளம் – கோடம்பாக்க இயக்குநர்கள் வரை நீளும் பட்டியல் அது.

‘பல்ப் ஃபிக் ஷ’னின் கதை 

ஊரையே கதிகலங்கச் செய்யும் மார்செலஸ் வாலஸ் என்கிற டானின் அடியாட்கள் வின்சென்ட் வேகா, ஜூல்ஸ் வின்ஃபீல்ட். தன்னிடமே குறுக்குசால் ஓட்டிய ப்ரெட் என்பவனிடமிருந்து ஒரு பொருளை மீட்கச் சொல்லி இருவரையும் அனுப்புகிறான் வாலஸ். இதற்கிடையே, வின்சென்ட்டுக்கும் வாலஸின் மனைவி மியாவுக்கும் இடையில் சின்னப் புரிதல். தவறுதலாய் ஹெராயினை மூக்கு வழியாக உறிஞ்சியதால் ஆபத்தான நிலையில் தவிக்கும் அவளை வின்சென்ட் காப்பாற்றுகிறான். வாலஸிடம் பணம் வாங்கிவிட்டு பாக்ஸிங் போட்டியில் தோற்பதாக ஒப்புக்கொள்ளும் பட்ச், போட்டியில் தோற்காமல் எதிராளியை அடித்தே கொன்றுவிடுகிறான். பழிவாங்கத் துடிக்கும் வாலஸிடமிருந்து தப்பி, தன் காதலியுடன் ஊரை விட்டு ஓடப் பார்க்கிறான். இதற்கிடையில் ஒரு காபி ஷாப்பில் கொள்ளையடிக்க நினைக்கிறது ஒரு இளம் காதல் ஜோடி. இவர்கள் அனைவரின் வாழ்க்கையும் ஒரு புள்ளியில் வந்து இணையும். அதை அத்தனை சுவாரசியமாகத் தந்திருப்பார் டாரன்டினோ.

சாமுவேல் ஜாக்ஸன், ஜான் ட்ரவால்டோ, உமா தர்மான், புரூஸ் வில்லிஸ் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம் இது. ஒவ்வொருவரும் பின்னியெடுத்திருப்பார்கள். வின்ஃபீல்டாக வரும் சாமுவேல் ஜாக்ஸன், பைபிள் வசனம் சொல்லிக் கொலை செய்யும் காட்சியில் கலக்கியிருப்பார். காட்சிகளில் இழையோடும் ப்ளாக் ஹ்யூமர், படத்தை இன்றுவரை கொண்டாட்டத்துடன் ரசிக்க வைக்கிறது. ஹாலிவுட் ரசிகர்களும் உலக சினிமா ரசிகர்களும் ஒரு சேரக் கொண்டாடும் படம் இது. தவறாமல் பார்த்துவிடுங்கள்!

ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு படம் பார்த்துவிட்டு, மனதை அமைதிப்படுத்த காதல் சொட்ட சொட்ட ஒரு படம் பார்க்க வேண்டும்தானே..? 1955-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு காதல் காவியத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்...

x