கார்த்திக் கிருஷ்ணா
மார்வல் சினிமாட்டிக் உலகில் 23-வது படம். `அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின்' தொடர்ச்சி, இதுவரை மார்வல் படங்களின் மையப்புள்ளியாக இருந்த அயர்ன் மேன் கதாபாத்திரத்தின் மறைவுக்குப் பின் வரும் கதை என ‘ஸ்பைடேர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க பல காரணங்கள் உள்ளன. எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா படம்?
நாயகன் பீட்டர் பார்க்கர், ஐரோப்பாவுக்கு பள்ளி அறிவியல் சுற்றுலா செல்கிறார். அங்கு தனக்கு மிகவும் பிடித்த மேர் ஜேனிடம் தன் காதல் பற்றி பேசிவிடவேண்டும் என்று முடிவெடுக்கிறார். அந்த நேரம் பார்த்து இன்னொரு பூமியிலிருந்து பிரச்சினை நம் பூமியை நோக்கி வருகிறது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மிஸ்டீரியோ என்பவரும் உடன் வருகிறார். சுற்றுலாவில் ஆர்வத்துடன் இருக்கும் பீட்டர் சூப்பர்ஹீரோ வேலை பார்க்க அழைக்கப்படுகிறார். தன் தகுதிக்கு மீறிய பிரச்சினை இது என்று நழுவுகிறார் பீட்டர். ஆனால், பிரச்சினை அவரை விடாமல் துரத்த கடைசியில் என்ன ஆனது என்பதே படம்.
இது ஒரு சூப்பர்ஹீரோ படம் என்பதை விட, பதின்ம வயதில் இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய படம் என்பதே சரியாக இருக்கும். அவனுக்கு வரும் பொறுப்புகள், அதை அவன் எதிர்கொள்ள இருக்கும் தயக்கம், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், எளிதில் நம்பி ஏமாறும் அப்பாவித்தனம், காதலைச் சொல்ல முடியாமல் இருக்கும் கூச்சம் என அத்தனை உணர்வுகளையும் திரையில் சரியாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜான் வாட்ஸ். அதை சரியாக நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் நாயகன் டாம் ஹாலண்ட். அவருக்கு என்றும் உதவ தயாராக இருக்கும் நண்பன், புத்திசாலி நாயகி, நல்லவனா கெட்டவனா என்று யோசிக்க வைக்கும் வில்லன் எனப் பாத்திரப் படைப்புகளும் படத்தை சுவாரசியமாக்குகின்றன.