துல்கர் சல்மானுடன் நடிக்க மறுத்தேனா? - நிவேதா பெத்துராஜ் பேட்டி


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in

நடிக்க வந்து மூன்றே வருடத்தில் பதினான்கு படங்களில் நடித்து கோலிவுட்டில் கெத்து காட்டிக் கொண்டிருப்பவர் நிவேதா பெத்துராஜ். தென் தமிழகம் தமிழ் சினிமாவுக்குத் தந்த அழகுக் கொடையான நிவேதா பெத்துராஜை காமதேனு பேட்டிக்காகச் சந்தித்தேன். அலட்டல் இல்லாத எளிமையான அழகில் அசரடிக்கும் நிவேதா, அனைத்துக் கேள்விகளையும் ட்ரேட் மார்க் சிரிப்புடனே எதிர்கொண்டார்.



நடிக்க வந்த மூன்று வருடத்தில் என்ன கத்துக்கிட்டீங்க?

அர்ப்பணிப்புதான். எந்தக் கதாபாத்திரமா இருந்தாலும் நூறு சதவீத அர்ப்பணிப்போட நடிக்கணும்னு புரிஞ்சிக்கிட்டேன். கேரவன் சரி இல்லைனாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் வசதிகள் போதாம இருந்தாலும் அதைப் பத்தி எல்லாம் குறை சொல்ல மாட்டேன். நான் அன்னைக்கு நடிக்கப் போற காட்சி மட்டும்தான் என் மனசுல இருக்கும். 

அப்புறம், நான் தேடிப்போய் யாரிடமும் படத்திற்குக் கதை கேட்கிறது இல்லை. என்னைத் தேடி வந்து கதை சொல்றவங்ககிட்ட கேட்டுட்டு எனக்குப் பிடிச்சிருந்தா மட்டும்தான் நடிப்பேன். மூணு வருசத்துல பதினாலு படம் பண்ணிட்டாலும் எனக்கு இது போதுமானதா இல்லை. நான் ஏன் முன்னணி நடிகர்களுடன் நடிக்கலைன்னு எல்லாரும் கேட்கிறாங்க. அவங்களுக்கான பதில்: அதற்கான சமயம் அமைஞ்சா எல்லாம் தானே நடக்கும்.

அப்படின்னா துல்கர் சல்மான் கூட தமிழ்,தெலுங்கு, மலையாளம்னு மூன்று மொழியில் நடிக்க இருந்த ‘வான்’ படத்தை ஏன் வேண்டாம்னு சொல்லிட்டீங்க?

நான் வேண்டாம்னு சொல்லலை, நிறைய பேர் அப்படித்தான் தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க. அவங்களால் நான் கொடுத்த கால்ஷீட் தேதியில் படம் எடுக்க முடியல. அவங்களுக்கு அப்ப சில சிக்கல், எனக்கும் அடுத்த படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால்தான் ‘வான்’ படத்தில் இருந்து விலகிட்டேன். துல்கரும் என் சூழ்நிலையைப் புரிஞ்சிக்கிட்டார்.

கைவசம் என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க?

விஷ்ணு விஷால் கூட ‘ஜகஜ்ஜால கில்லாடி' என்னுடைய அடுத்த ரிலீஸ், விஜய் சேதுபதியுடன் ‘சங்கத் தமிழன்’, பிரபுதேவாவுடன் ‘பொன்மாணிக்கவேல்'னு அடுத்தடுத்து என் படங்களைப் பார்க்கப் போறீங்க.

x