தும்பா - திரை விமர்சனம்


கேரள வனப்பகுதியிலிருந்து தனது குட்டியுடன் தப்பிக்கும் புலி ஒன்று தமிழகத்தில் ஆனைமலை டாப் ஸ்லிப் பகுதிக்கு வந்து சேர்கிறது. அங்கே பெயின்ட் அடிக்கும் பணிக்கு தீனாவும் உதவியாளராக தர்ஷனும் வருகிறார்கள். வைல்ட் லைஃப் போட்டோகிராபராக விரும்பும் கீர்த்தி பாண்டியன், புலியைப் புகைப்படம் எடுப்பதற்கு தீனா, தர்ஷனின் உதவியை நாடுகிறார். இவற்றுக்கிடையில் வனப் பாதுகாப்பு அதிகாரி, தப்பி வந்த புலியை சட்டவிரோதமாகத் திருடி விற்கத் திட்டமிடுகிறார். அதிகாரியின் தீய நோக்கம் நிறைவேறியதா அல்லது புலி காப்பாற்றப்பட்டதா? தீனா உள்ளிட்ட மற்ற மூவரின் பங்கு என்ன என்பதே ‘தும்பா’வின் மீதிக் கதை?

புலியை ஆபத்தான விலங்காகவே இதுவரை தமிழ் சினிமா பதிவு செய்து வந்திருக்கிறது. முதல்முறையாக புலியை ஒரு உயிராகப் பதிவு செய்திருக்கிறது ‘தும்பா’. பல்லுயிர்ச் சங்கிலியில் புலிகளின் முக்கியத்துவம், பேராசை பிடித்த மனிதர்களால் வன விலங்குகளுக்கு நேரும் ஆபத்து, வன விலங்குகளும் மனிதர்களும் இணைந்து வாழ்வதன் தேவை உள்ளிட்டவற்றை அக்கறையுடனும் சரியாகவும் பேசியிருப்பதற்காகவே அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராமைப் பாராட்டலாம்.

புலி உள்பட படத்தில் காண்பிக்கப்படும் அனைத்து விலங்குகளும் உண்மையானவை அல்ல, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்டவை என்று தெரிந்தாலும் அவை உறுத்தலாக இல்லை. குறிப்பாக, புலி வரும் காட்சிகளில் ஒரு கட்டத்துக்கு மேல் கிராபிக்ஸ் என்பதை மறந்து நிஜமான புலியைப் பார்ப்பது போன்ற உணர்வு வந்துவிடும் அளவுக்குத் தொழில்நுட்பக் குழு நன்றாகப் பணியாற்றியிருக்கிறது.

படத்தின் ஹைலைட்டே புலி தொடர்பான காட்சிகள்தான். ஆனால், முதல் பாதியில் தொடக்கக் காட்சியிலும் இடைவேளைக் காட்சியிலும் மட்டுமே புலியார் தலை காட்டுகிறார். முதல் பாதியில் பெரும்பகுதியை தீனா,தர்ஷன் இணை செய்யும் அபத்த நகைச்சுவைகளை வைத்து ஓட்டியிருக்கிறார்கள். அவை சில இடங்களில் சிரிப்பையும் சில இடங்களில் கடுப்பையும் வரவைக்கின்றன.

x