இந்த மாளிகை வசந்த மாளிகை- சிவாஜியைக் கொண்டாடும் குமரி!


என்.சுவாமிநாதன்

வண்ணத் தோரணங்களும் பதாகைகளுமாகக் களைகட்டியிருக்கிறது நாகர்கோவில் தங்கம் திரையரங்கம். திரும்பிய பக்கமெல்லாம், மதுக்கிண்ணம் ஏந்தியபடி, சிவப்பு கோட்டில் சிரிக்கிறார் சிவாஜி. அவரது படத்துக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக கோஷம் எழுப்புகிறார்கள் ரசிகர்கள். கடந்த வெள்ளிக்கிழமை டிஜிட்டல் வடிவில் புதுப்பொலிவுடன் வெளியாகி யிருக்கும் ‘வசந்தமாளிகை’ படத்திற்காகத்தான் இத்தனை கொண்டாட்டமும்!     

தமிழகமெங்கும் இந்தப் படம் வெளியாகியிருந்தாலும், குமரி மாவட்டத்தில் மட்டும் கூடுதல் உற்சாகம் ததும்புகிறது. தலைமுறைகள் தாண்டி குமரிக்கும் சிவாஜி குடும்பத்துக்கும் இடையில் தொடரும் ஆத்மார்த்த உறவுதான் இதற்குக் காரணம். எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் போட்டி நிலவிய காலம்தொட்டு இன்றுவரை குமரி மாவட்டத்தில்சிவாஜி ரசிகர்களின் கூட்டம் குறையவேயில்லை. பிரபு, விக்ரம் பிரபு என சிவாஜி குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைக் கலைஞர்களையும் அள்ளியெடுத்து அரவணைத்துக்கொள்கிறது குமரி மாவட்டம்.

இன்றும் குமரி திரையரங்குகளில் புதுப் படங்கள் வெளியாகாத சமயங்களில் சிவாஜி படங்களே ஆபத்பாந்தவன்.

x