நண்டு சிண்டெல்லாம் ‘நேசமணி வடிவேலு’ங்குது! - வைகைப்புயல் வடிவேலு பேட்டி


நா.இரமேஷ்குமார்
rameshkumar.n@thehindutamil.co.in

மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுவதாய் இல்லை... தமிழ் சினிமா ரசிகர்களின் வாழ்வில் வடிவேலுவின் வழக்கு மொழி இரண்டற கலந்துவிட்டதன் காரணமாய் தான் கடல் தாண்டி... கண்டம் தாண்டி இணைய உலகில் மூன்று நாட்களுக்கு ‘ப்ரே ஃபார் நேசமணி’ என்று நின்று கில்லியடித்திருக்கிறார் வடிவேலு.

“காமதேனு இதழுக்கு சின்னதா ஒரு பேட்டி வேணும்ணே” எனக் கேட்டால், "பேட்டி கீட்டியெல்லாம் எதுக்குண்ணே... என்ன கேட்கப் போறீங்க... சாயந்தரமா... சரி வேணாம்... இப்பவே போன்லேயே கேளுங்க... அப்படியே பேசுவோம்.. மதுரைல இருக்கேன்”என்று ஆரம்பிக்கிறார் வடிவேலு.

‘ப்ரே ஃபார் நேசமணி’ன்னு மூணு நாளா உங்க ரசிகர்கள் உங்களை வெச்சு செஞ்சுக்கிட்டிருக்காங்களே... அதிலிருந்தே ஆரம்பிப்போம். நீங்க என்ன நினைக்கறீங்க?

அதான் நீங்களே சொல்லீட்டீங்களே... வெச்சு செஞ்சாங்கன்னு... இதுவும் நான் சொன்னது தானேண்ணே... ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. வேறென்ன சொல்ல? இதுவரைக்கும் எத்தனையோ படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, இந்த ஒரு படத்துல வந்த ஒரு சீன்ல சுத்தியல் வைச்சு நடிச்சதுல இதெல்லாம் நடந்திருக்கு.

இப்போ வடிவேல்ன்ற பேரு போய், நண்டு சிண்டெல்லாம் ‘நேசமணி வடிவேலு’னு கூப்பிட ஆரம்பிச்சுடுச்சி... இதனை ரசிச்ச மக்கள் எல்லாருக்கும் தலைவணங்குறேன். உலகம் முழுக்க இந்த வடிவேலு சென்றடைந்திருப்பதை அறிந்து சந்தோசமாயிருக்கு. அந்த காமெடி காட்சிகளைப் படம் பிடிக்குறப்போ பயங்கர சிரிப்பு தான். அதுவும் அந்த கடிகாரம் உடையறதுக்கு முன்னாடி காட்சியில நடிக்கும்போது விஜய் பயங்கரமா சிரிச்சுட்டார். நடிகர் சூர்யா சுவரை மெல்லமா சுரண்டுவார். அப்போ "மெல்லடா, மெல்ல, சுவருக்கு வலிச்சிர போகுது. வேகமா தேய்டா பரதேசி"ன்னு நான் கத்துவேன். அப்படி சொன்னவுடனே அவர் சிரிச்சுட்டார். அந்த மாதிரி காட்சி எல்லாம் மிகவும் ரசிச்சுச் சிரிச்சதால விஜயால நடிக்க முடியாம எட்டு முறை, ஒன்பது முறை கூட காட்சியை எடுத்திருக்காங்க. அந்த கடிகாரத்தை மட்டும் மூணு நாலு முறை சிரிச்சுச் சிரிச்சே உடைச்சோம். அப்புறம் அந்த சுத்தியல் காமெடியிலதான் சூர்யா ரொம்ப சிரிச்சாப்புல. அப்போ இயக்குநர் சித்திக், “லேசா நாக்கை கடிச்சிக்கிட்டு நடிங்க”ன்னு ஐடியா கொடுத்தாரு.

x