பேசும் படம் - 25: நட்புக்கு போஸ் கொடுத்த மர்லின் மன்றோ 


ஹாலிவுட்டின் மிகச்சிறந்த கனவு நாயகிகளில் ஒருவர் மர்லின் மன்றோ (Marilyn Monroe ). தன் நடிப்பாலும், கவர்ச்சியாலும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வசீகரித்த இவரது ஏராளமான புகைப்படங்களை இன்று பார்க்க முடிகிறது. அதில் மிகச்சிறந்த படமாக இங்கிருக்கும் படத்தைக் கூறலாம். 1954-ம் ஆண்டு, ‘தி செவன் இயர் இட்ச்’ (The Seven Year Itch) என்ற படத்தின் படப்பிடிப்பின்போது இப்படம் எடுக்கப்பட்டது. இதை எடுத்தவர் சாம் ஷா (Sam Shaw) என்ற புகைப்படக் கலைஞர்.

 மர்லின் மன்றோ அறிமுக நடிகையாக இருந்த காலகட்டத்தில் 1951-ம் ஆண்டில் அவருக்கு அறிமுகமானார் சாம் ஷா. இச்சமயத்தில் மர்லின் மன்றோ நடித்துக்கொண்டிருந்த படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக இவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். சாம் ஷாவுக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதால், தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது அவரையும் காரில் உடன் அழைத்து வருமாறு மர்லின் மன்றோவை படத்தின் இயக்குநர் கேட்டுக்கொண்டார். தினமும் ஒரே காரில் படப்பிடிப்புக்கு சென்றதால் மர்லின் மன்றோவுக்கும் சாம் ஷாவுக்கும் இடையிலான நட்பு பலப்பட்டது. பின்னாளின் மர்லின் மன்றோ பணியாற்றிய பல படங்களில் சாம் ஷா, ஸ்டில் போட்டோகிராபராக இருந்தார். மர்லின் மன்றோ அவரை செல்லமாக ‘சாம் ஸ்பேட்’ என்றே அழைப்பார்.

இடைப்பட்ட காலத்தில் மர்லின் மன்றோவின் படங்கள் ஹிட்டாக, அவர் நம்பர் ஒன் நடிகையாக உருவெடுத்தார். 1954-ல் பில்லி வில்டரின் நகைச்சுவைப் படமான ‘தி செவன் இயர் இட்ச்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மர்லின் மன்றோ. இப்படத்தில் மர்லின் மன்றோவும், ஈவெல் ஸ்ட்ராலும் நியூயார்க் நகர வீதியில் கிரில்களால் அமைக்கப்பட்ட சாக்கடை மூடியைக் கொண்ட நடைபாதையில் நடந்து வருவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அப்படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றிய சாம் ஷாவுக்கு ஒரு யோசனை வந்தது.

இந்த படப்பிடிப்பு நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பொழுதுபோக்கு பூங்காவுக்கு சாம் ஷா சென்றிருந்தார். அந்தப் பூங்காவில் ஓரிடத்தில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையின் உட்புறத்தில் பிரம்மாண்டமான மின்விசிறி பொருத்தப்பட்டிருந்தது. இந்த மின்விசிறி சுழலும்போது, மேடையின் மீது நிற்பவர்களின் ஆடைகள் காற்றில் மேல்நோக்கி பறக்கும். இது வித்தியாசமான அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு அளிக்கும்.

இதேபோன்று, மர்லின் மன்றோ நடக்கும் நடைபாதையின் கிரில்களுக்கு கீழ் மின்விசிறியை வைக்கலாமே என்ற யோசனை சாம் ஷாவுக்கு வந்தது. இதன்மூலம் ஆடைகள் காற்றில் பறக்க, கவர்ச்சிகரமான தோற்றத்தில் மர்லின் மன்றோவைப் படம்பிடிக்கலாம் என்பது அவரின் எண்ணம். இதை இயக்குநரிடம் சொல்ல, அவரும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து படத்துக்கு விளம்பரம் தேடுவதற்காக, இப்படி ஒரு காட்சியை எடுப்பது பற்றி பத்திரிகையாளர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

படப்பிடிப்பு நடந்த நாளில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் குவிந்தனர். மர்லின் மன்றோவைப் படமெடுக்க அவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர். அதே நேரத்தில் மர்லின் மன்றோவின் நெருங்கிய நண்பர் என்பதாலும், இப்படி ஒரு யோசனையைச் சொன்னவர் என்பதாலும், சிறப்பாக புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடம் சாம் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது.
படப்பிடிப்பு தொடங்கியதும் ராட்சத மின்விசிறிகள் சுழலத் தொடங்க, மர்லின் மன்றோவின் ஆடை மேல்நோக்கி பறந்தது.

கஷ்டப்பட்டு தன் கைகளால் கால்பகுதியை துணியால் மூடியபடி சாம் ஷாவை அழைத்த, மர்லின் மன்றோ, “சாம் ஸ்பேட்... இதைத்தானே நீ எதிர்பார்த்தாய்?” என்றபடி அவருக்கென்று ஸ்பெஷலாக ஒரு போஸ் கொடுத்தார். அந்தப் படத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.

இந்த படத்தில் மர்லின் மன்றோ அணிந்திருக்கும் வெள்ளை நிறை ஆடை, கடந்த 2011-ம் ஆண்டில் சுமார் 32 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம் ஷா

1912-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த சாம் ஷா, சிறுவயதில் இருந்தே சிற்பங்கள் செய்வது, படங்களை வரைவது மற்றும் புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்த நிலையில் ஸ்காலர்ஷிப்பில் ஓவியக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும், ஸ்டுடியோ ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பும் ஒரே நேரத்தில் இவரைத் தேடிவந்தன. ஸ்டுடியோவில் பணியாற்றும் வாய்ப்பை தேர்ந்தெடுத்துக்கொண்ட சாம் ஷா, புகைப்படங்களை எடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார். மர்லின் மன்றோவின் ஏராளமான ஸ்டில்களை எடுத்துள்ள இவர், திரைப்படத்துறையில் கலை இயக்குநராகவும் இருந்தார். அமெரிக்
காவின் புகழ்பெற்ற பல்வேறு பத்திரிகைகளின் அட்டையை இவரது படங்கள் அலங்கரித்துள்ளன. புகழ்பெற்ற புகைப்படக்காரராக விளங்கிய இவர் தனது 87-வது வயதில் காலமானார்.

x