உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘பேட்ட ராப்’ நிகழ்ச்சி முன்னோட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தக்கவைத்து, அதே ஆட்டமும் பாட்டுமாய் 10 எபிசோடுகளைக் கடந்து துள்ளலுடன் செல்கிறது.
இந்த நிகழ்ச்சியின் இளமை புதுமை பரவசத்துக்குக் காரணமாக இருக்கும் ஷோவின் தொகுப்பாளர்கள் தீபக், மகேஸ்வரியுடன் கலாய்ப்பாக ஒரு சாட்டிங்! கையில் கிடார், மைக் சகிதமாகவே பேச ஆரம்பிக்கிறது ஜோடி.
“ஏதாவது வித்தியாசமான கேம் ஷோ பண்ணலாம்னு கிரியேட்டிவ் டீம்ல ப்ளான் பண்ணிட்டு இருந்தப்பதான், இந்த ‘பேட்ட ராப்’ ஐடியா தோணுச்சு. எல்லாருமே, ஷோ டைட்டில் கேட்டுட்டு இது ஏதோ, டான்ஸ் ஷோன்னுதான் நெனைச்சாங்க. கரெக்ட்டா, ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸை பிடிச்சு, படார்னு ப்ரொமோவைப் போட்டு பாட்டு ஷோன்னு பல்பு எரிய வைச்சோம்” என்று தீபக் சொல்ல, “இந்த ஷோவை செலிபிரிட்டிகளைப் பாட வச்சு பண்றோம். வழக்கமா, பிரபலங்களை வச்சு டான்ஸ் ஆடுறது, அவங்க திறமைகளைக் காட்டுற மாதிரிதான் ஷோ வந்திருக்கு. இது ரொம்பவே புதுசு. ராகம் வச்சு பாடுறதெல்லாம் இல்லை. விளையாட வச்சு பாட வைக்குறோம்” என்று சமர்த்துப் பெண்ணாக ‘பேட்ட ராப்’ நிகழ்ச்சிக்கு ப்ரொமோ செய்கிறார் மகேஸ்வரி.