நயன்தாரா மாதிரியே சின்சியரான நடிகை டாப்ஸி! - ‘கேம் ஓவர்’ இயக்குநர் அஷ்வின் சரவணன்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in

தமிழின் சிறந்த ஹாரர் படங்களில் ஒன்று என ஸ்கோரடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் ‘கேம் ஓவர்’ எனும் த்ரில்லர் படத்துடன் மீண்டும் வருகிறார். தனிமையில் இருக்கும் ஹீரோயின், கம்ப்யூட்டர் கேம்ஸ், அச்சுறுத்தும் அமானுஷ்யம் என்று படத்தின் டீஸரே மிரட்டுகிறது. படத்தின் சவுண்ட் மிக்ஸிங் வேலைகளில் இருந்தவரை ‘காமதேனு’ பேட்டிக்காகச் சந்தித்தேன். கனத்த மவுனத்தின் வெறுமை அழுத்திய அந்த அறையில் எங்கள் உரையாடல் மட்டும் ஒலித்தது வித்தியாசமான அனுபவம்.

உங்களைப் பத்தி சொல்லுங்க...

படிச்சது எல்லாம் சென்னைல, ஆனா, அடிப்படையில மதுரைக்காரன் நான். காலேஜ்ல படிச்சிட்டு இருந்தப்ப ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியைப் பார்த்தேன். அப்பவே படம் எடுக்கணும்னு ஆசை வந்தது. ஒரு சின்ன கேமரா வாங்கி ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து குறும்படமா எடுத்துத் தள்ளினேன். அப்புறமா கேம்பஸ்ல செலக்ட் ஆகி பெரிய கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். மூணு மாசத்துக்கு மேல வேலை பார்க்கப் பிடிக்கல. வேலைய விட்டுட்டு யாராவது ஒரு டைரக்டர்கிட்ட அசிஸ்டென்டா வேலைக்குச் சேரலாம்னு வாய்ப்புத் தேடி அலைஞ்சேன். வாய்ப்புகள் அமையல. நேரத்தை வீணாக்குறதுக்கு ஒரு கதை எழுதலாம்னு முடிவு பண்ணி எழுதுன கதைதான் ‘மாயா’. பல போராட்டங்களுக்கு அப்புறம்தான் அந்தப் படத்தை இயக்கினேன்.

‘மாயா’, ‘கேம் ஓவர்’ன்னு தொடர்ச்சியா ரசிகர்களை மிரட்டியெடுக்குறீங்களே. வேற ஜானர்ல படம் எடுக்குற ஐடியா இல்லியா?

மாயாவுக்கு அப்புறம், எஸ்.ஜே. சூர்யாவை வச்சு ‘இறவாக்காலம்'னு ஒரு படம் பண்ணினேன். காதல் உறவுகளை மையமா கொண்ட படம் அது. சில போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மட்டும்தான் பாக்கி. என்ன காரணம்னு தெரியல, வேலைகள் அப்படியே நின்னுடுச்சு. அந்த விரக்தியில இருந்தப்போ, ஈஸியா எடுக்குற மாதிரி ஒரு படம் பண்ணணும்னு தோணுச்சு. அப்படி யோசிச்சதுதான் ‘கேம் ஓவர்'.

சின்ன வயசுல இருந்தே எனக்கு த்ரில்லர் நாவல்கள் படிக்கப் பிடிக்கும். அதனாலயே த்ரில்லர் படங்கள் இயக்கும்போது ரொம்ப சந்தோசமா ஃபீல் பண்றேன். ஒரே ஜானர்ல வேற வேற கதைகளை வச்சி வித்தியாசமா படம் பண்றது பெரிய சவால். அந்தச் சவால் எனக்குப் பிடிச்சிருக்கு.

x