இந்தப் படம் ராய் லட்சுமியின் கலரை மாற்றும் - ’சிண்ட்ரெல்லா' இயக்குநர் வினோ வெங்கடேஷ்’


நா.இரமேஷ்குமார்

“சி னிமாவுல பெரிய பின்புலம் எல்லாம் இல்லை சார்... பெங்களூரூல மல்டிமீடியா படிச்சேன். சினிமா ஆசையில சென்னைக்குக் கிளம்பி வந்து நிறைய இயக்குநர்கள்கிட்ட வேலை பார்த்தேன். அதுல பேர் சொல்கிற மாதிரியான இயக்குநர்னா எஸ்.ஜே.சூர்யா சார். அவருக்கிட்ட நாலஞ்சு வருஷம் வேலை பார்த்தேன். அவருடைய ‘இசை’ படம் ரிலீஸானதுக்கப்புறமா வெளியே வந்து, ஒரு ஸ்கிரிப்ட் தயார் பண்ணேன். வாய்ப்பும் கிடைச்சது. ஆனா, அந்த வாய்ப்பு கைகூடவில்லை. தள்ளிப் போய்கிட்டே இருந்தது. சினிமாவுல படம் இயக்கி, அது ரிலீஸாகி வெற்றியடைஞ்சாதான் இயக்குநர்ன்னு கிரெடிட் கிடைக்கும். எனக்கு அது ஆறேழு தடவை கிட்ட வந்து, தள்ளிப் போயிருக்கு. இதோ... லட்சுமி ராய், சாக்‌ஷி அகர்வால்னு ‘சிண்ட்ரெல்லா’வோட களமிறங்கி இருக்கிறேன்” எனத் தன் வலியை மறைத்துப் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் வினோ வெங்கடேஷ்.

எஸ்.ஜே.சூர்யாவோட விசிட்டிங் கார்டு உங்களுக்கு உதவலையா? ‘சிண்ட்ரெல்லா’ வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

சினிமாவுல உதவி இயக்குநர் என்பது ஒரு அறிமுகம் மட்டும்தான். அதன் பிறகு நம்ம திறமையை வெச்சுதான் வெளியே வரணும். முதல் வாய்ப்புத் தள்ளிப் போனதும், ஜெயம் ரவியை மனசுல வெச்சு ஒரு கதையை உருவாக்கி வெச்சிருந்தேன். அப்போ நண்பர் ஒருத்தர், “கதாநாயகியை மையப்படுத்தி ஏதாவது ஹாரர் ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க”ன்னு கேட்டார். அவருக்கிட்ட நான் ஏற்கெனவே உருவாக்கி வெச்சிருந்த கதையை இன்னும் மெருகேற்றிச் சொன்னேன். அதுதான் ‘சிண்ட்ரெல்லா’.

x