உ.சந்தானலெட்சுமி
“செவப்பா இருக்கிறவங்க மட்டும்தான் மாடலிங் பண்ணலாம்கிற காலமெல்லாம் மலையேறிடுச்சு. கறுப்பா இருக்கிறவங்களுக்கு போடுற நகையும் மேக்கப்பும்தான் தனிச்சு தெரியும்னு எல்லாருக்கும் புரிய ஆரம்பிச்சுருக்கு... ‘ஐரா’ நயன்தாராவைப் பார்த்தீங்கல்ல...” என்று டஸ்கி ஸ்கின் பெண்களுக்காக வக்காலத்து வாங்குகிறார் ரோஷிணி ஹரிப்ரியன். விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நாயகி.
ஆரவாரமில்லாத எளிய ஒப்பனை, பூப்போட்ட மேக்ஸி கவுன், கண்களில் அளவான காஜல், பேச்சில் அத்தனை யதார்த்தம் என்று நேரில் ரோஷிணி இன்னும் அழகு.
“உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு” என்று ஆரம்பித்தால், அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார். உதடு சுளித்து சிரிக்கும் போது குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் பற்கள் ரோஷிணிக்கு கூடுதல் வசீகரம்.