நா.இரமேஷ்குமார்
‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த இயக்குநர் வ.கீரா, இம்முறை ‘பற’ படத்தின் மூலமாக வருகிறார். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கண்களை மிரட்டிய கானல் நீரையெல்லாம் கடந்து, வளசரவாக்கத்தில் அவரைச் சந்தித்தேன்.
சாப்பிடாமல் அவசரப்பட்டுப் போய் யாரையும் சந்திக்கக் கூடாதென உணர்ந்த நாள் அது. நல்ல மதிய நேரத்தில் கொதிக்கிற தேநீரை அருந்தியபடியே ‘பற’ படம் பற்றி பேச ஆரம்பித்தார் இயக்குநர் கீரா. சமூக அவலங்களையும், புரட்சியையும் பேசுகிறவர்கள் மூன்று வேளையும் தேநீர் பிரியர்களாய் இருப்பார்கள் போல... ஆனாலும் ‘பற’ படத்தின் கதையை அவர் சொல்லச் சொல்ல, பசி மறந்து, சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கதைக்குள் என்னை ஈர்த்துச் சென்றது.
“இந்தச் சமூகத்தில் சாதி ஒடுக்குமுறைகள், வர்க்க ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரம்னு ஏதோவொரு வகையில ஒவ்வொரு மனுசனும் சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறான். அப்படியான சிக்கல்களில் இருந்து விட்டு விடுதலையாகின்னு சொல்வோமில்ல... அந்த மாதிரி விடுதலையாகிப் பறக்கணும் என்பதுதான் ‘பற’ தலைப்பு.