அடுத்த படத்தில் நான் விஜய்க்கு அக்கா!- குஷியில் தேவதர்ஷினி


உ.சந்தானலெட்சுமி

“செத்தவா யாராவது இருந்தா செத்த வரேளா...” என்று ‘காஞ்சனா 3’ படத்தில் சும்மா... அதகளம் பண்ணி யிருக்கிறார் தேவதர்ஷினி. உங்களது அடுத்தடுத்த பிளான்ஸ் என்ன என்ற கேள்வியுடன் அவரைச் சந்திதோம். நாம் கேட்பதற்கு முன்பே அவராகவே பேசத் தொடங்கினார்.

“நானும் சேத்தனும்தான் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தோம். ‘96’ படத்துல மகள் நியதி அறிமுகமானது எதிர்பாராத விஷயம். ஆனா, அவளுக்கு நடிப்பில் ஆர்வமிருக்கு. பத்தாவது படிக்கிறாள். அதனால் இப்போதைக்கு சினிமாவைத் தவிர்த்து வருகிறோம். எங்க குடும்பமே இப்போ சினிமா குடும்பமா இருக்கு. சினிமாதான் எங்களுக்கு குடும்பமாகவும் இருக்கு” என்று டிரேட் மார்க் புன்னகையை உதிர்க்கிறார் தேவதர்ஷினி.

“சேத்தனும் நானும் சி.வி.குமார் சாரோட படத்துல நடிக்கப் போறோம். அதைவிட சர்ப்ரைஸான விஷயம் விஜய் 63 படத்துல விஜய்க்கு அக்காவா நடிச்சிருக்கேன். ஊரே கொண்டாடுகிற விஜய், ஷூட்டிங்ல ‘அக்கா... அக்கா...’ன்னு உருகுனா எப்படியிருக்கும்? செம சர்ப்ரைஸ் இல்ல... இந்த வாய்ப்பு என் மகள் மூலமா தான் எனக்குக் கிடைச்சது. விஜய்க்கு தங்கையா நடிக்க மகள் நியதியைக் கேட்டு இயக்குநர் அட்லிகிட்டேயிருந்து போன் வந்தது. அப்பத்தான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் படிச்சுக்கிட்டு இருந்தா. விஜய் கூட நடிக்க வருகிற வாய்ப்பை யார்தான் வேண்டாம்னு சொல்வாங்க? ரொம்பத் தயக்கத்தோட இயக்குநர் அட்லிகிட்டே ‘பத்தாவது படிக்கிறா’ன்னு சொன்னேன். அவர் நல்லவிதமா புரிஞ்சுக்கிட்டார். ஆனா, பாருங்க... எங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் அந்தப் படத்துல நடிக்கணும்னு இருந்திருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு, ‘விஜய்க்கு அக்கா ரோல் பண்றீங்களா?’ன்னு கேட்டார் அட்லி. உடனே ஓகே சொல்லிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. படத்துல எனக்கு ரொம்ப முக்கியமான ரோல்.

x