அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- திரை விமர்சனம்


கார்த்திக் கிருஷ்ணா

தானோஸ் பாதி உலகை அழித்து 21 நாட்கள் கழித்து ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ கதை தொடங்குகிறது. மீதமுள்ள சூப்பர் ஹீரோக்கள் என்ன செய்வதென்று தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். தங்களின் கையாலாகாத தனத்தை எண்ணி விரக்தியில் அவெஞ்சர்ஸ் ஆளுக்கொரு திசையில் சென்று விடுகின்றனர். எதேச்சையாக குவாண்டம் ரியால்ம் எனப்படுகிற குவாண்டம் உலகத்திலிருந்து வெளியே வரும் ஆண்ட்மேன் / ஸ்காட் லேங் கதாபாத்திரத்தால் இழந்தவர்களை மீட்க ஒரு ஆபத்தான யோசனை கிடைக்கிறது. திட்டமும் வகுக்கப்படுகிறது. திட்டம் வெற்றியடைந்ததா. அதிலிருக்கும் ஆபத்தால் யாருக்கு என்ன ஆனது என்பதே அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்.

‘அயர்ன்மேன்’ படத்தின் மூலம் 2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பயணம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த ஒரு வருடமாகவே பயங்கர எதிர்பார்ப்பில் இருந்த மார்வெல் ரசிகர்களுக்கு செம தீனி. அந்த எதிர்பார்ப்புக்கு சாட்சியாக காட்சிக்கு காட்சி விசில் பறக்கிறது. அதிலும் கடைசி போர் காட்சியில் கேப்டன் அமெரிக்காவின் சுத்தியல் சாகசத்தில் தியேட்டரே அதிர்கிறது.

இப்படத்தை தனித்துவமாக நிற்கவைத்தது நடித்துள்ள நடிகர்களும், படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளும் தான். வழக்கமான அவெஞ்சர்ஸ் படங்களில் இருக்கும் ஆக்‌ஷன், காமெடி இந்தப் படத்திலும் உண்டு. ஆனால், அதையெல்லாம் தாண்டி இதுவரை இல்லாத அளவுக்கு எமோஷனல் காட்சிகள் படம் முழுவதும் இருக்கிறது. அதிலும் இறுதிக்காட்சியில் பலரும் கலங்கிவிடுவார்கள்.

x