பன்முகத் தன்மையின் பல்கலைக்கழகம்!


திரைபாரதி
readers@kamadenu.in



அறுபதுகளின் அந்திமப் பகுதியான 1959 வருடம் அது. எம்ஜிஆரும் சிவாஜியும் பெரும் நட்சத்திரங்களாக மின்னிய காலம். இருவரும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நடிக்க, இறுதியில் அவர்களால் வெல்லப்படும் கொடூர வில்லன்களாக எம்.என்.நம்பியாரோ எம்.ஆர்.ராதாவோ நடித்தால் கல்லா நிரம்பிவிடும் என்று ஸ்டுடியோக்கள் கண்ணை மூடிக்கொண்டு படமெடுத்த காலகட்டம்.
அப்போது, வாள்களையும், கேடயங்களையும் வீசியெறிந்துவிட்டு, குறிஞ்சி மலரைப்போல திரையில் பூத்தது ‘கல்யாணப் பரிசு’.

நீள நீளமான வசனத்தை வைத்தே கதையை நகர்த்தி விடலாம் என்று செந்தமிழில் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் குரலை அடக்கினார். ‘கல்யாணப் பரிசு’ கதாபாத்திரங்களின் உரையாடலைப் பேச்சுத் தமிழுக்கு மாற்றினார். காட்சி மொழிக்கும் கதாபாத்திரங்களின் யதார்த்தமான உணர்ச்சிகளுக்கும் முன்னுரிமை அளித்திருந்தார். உணர்ச்சிகளை உண்மையாகப் பிரதிபலிக்கும் இயல்பான நடிப்பை நடிகர்களிடம் அறுவடை செய்துகொண்டார். 

பெரிய நட்சத்திரங்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்காமல் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி என வளர்ந்துகொண்டிருந்த புதியவர்களை முதன்மை வேடங்களில் அறிமுகப்படுத்தி அவர்களையே புகழ்பெற்ற நட்சத்திரங்களாக உயர்த்திக் காட்டினார். ‘கல்யாணப் பரிசு’ வழியாக தமிழ் சினிமாவுக்கு புதிய பாய்ச்சலையும் பாதையையும் வகுத்துத்தந்த அந்தப் புதுமை இயக்குநர் சி.வி.ஸ்ரீதர்.

எதிர்பாராத யதார்த்தங்களின் தொடக்கம்

மதுராந்தகம் அருகேயுள்ள சித்தாமூரில் பிறந்து செங்கல்பட்டில் வளர்ந்தவர் ஸ்ரீதர். செங்கல்பட்டு புனித வளனார் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைப் பயின்றவர். 9-ம் வகுப்பு பயின்றபோது பள்ளி ஆண்டுவிழாவுக்காக நாடகம் எழுதி, அதில் நாயகனாகவும் நடித்து பள்ளியிலேயே பிரபலமடைந்துவிட்டார் ஸ்ரீதர். பள்ளிப்படிப்பு முடிந்ததும் ‘லட்சியவாதி’ என்ற கதையை திரைக்கதை வடிவில் எழுதிக்கொண்டு ஏவி.எம் ஸ்டுடியோவுக்குச் சென்றார். அங்கே, இயக்குநர் ப.நீலகண்டனைச் சந்தித்து தனது கதையைக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த நீலகண்டன் “கதை தேறாது” என்று கூறிவிட்டார். ஆனால், டி.கே.சண்முகம் அந்தக் கதையால் கவரப்பட்டு அதற்கு ‘ரத்தபாசம்’ என்று பெயரிட்டு நாடகமாக அரங்கேற்றினார். நாடகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத் திரைப்படமாக்க முடிவுசெய்தார். அதற்கான திரைக்கதை வசனத்தையும் ஸ்ரீதரையே எழுதும்படி கூற, கதை - வசனகர்த்தாவாக ஸ்ரீதரின் திரைப்பயணம் தொடங்கியது.

x