உ.சந்தானலெட்சுமி
ராதிகா என்ற அசாத்திய ஆளுமை, பெரிய திரையை மாத்திரமல்ல... சின்னத்திரையையும் தனக்குள்ளே ஈர்த்து வைத்திருக்கிறது. முந்தானையை இழுத்து மூக்கைச் சிந்தும் பெண்களையே அதிகம் காட்டும் சீரியல்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், நிமிர்ந்த நன்னடையுடன் எல்லா நிர்வாகத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதைத் தனது ‘சித்தி’ சீரியல் மூலம் நிரூபித்துக் காட்டியவர் நடிகவேளின் மகள். சித்தியில் சாரதாவாக சீரியல் ரசிகர்களைப் புதிய கோணத்தில் ஈர்த்தவர், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலையாய், அரசியாய், வாணி ராணியாய் தொடர்ந்து சின்னத் திரையில் ஜொலித்தார். அடுத்த அவதாரமான தனது ‘சந்திரகுமாரி’யில் சரித்திர நாயகியாக அரிதாரம் பூசிய ராதிகா, யாரும் எதிர்பாராத வகையில் அந்த சீரியல் நாயகியாக நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார்.
தொலைக்காட்சியில் ‘ப்ரைம் டைம்’ என்பது இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து மணி. இதில் ஒன்பதரை மணி என்பது சன் டிவியில் ராதிகா சீரியலுக்கான நேரம் என்பது கடந்த பல வருடங்களாக சின்னத்திரை ரசிகர்களுக்குள் பதிந்து கிடக்கும் விஷயம். முன்பெல்லாம் இந்த நேரத்தில் வீட்டுப் பெண்களை டிவியை விட்டு நகர்த்துவது அவ்வளவு எளிதான காரியமில்லை.
இப்படித் தனது அசாத்திய உழைப்பால் சீரியல் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ராதிகா, தனது அடுத்த சீரியலாக சந்திரகுமாரியைப் பிரகடனம் செய்தபோது அது சினிமா அளவுக்குப் பேசப்பட்டது. இது சின்னத்திரை சரித்திரத்தில் ராதிகாவுக்கு இன்னொரு மைல் கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளும் இப்போது பொய்த்துவிட்டன.