கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!- மனம் திறக்கும் ‘ஐரா’ கேப்ரிலா செலஸ்...


உ.சந்தானலெட்சுமி

“கறுப்பு நிறம் மத்தவங்களுக்கு வேணும்னா வெறுப்பா இருக்கலாம்... ஆனா, எப்போதுமே நிறம் எனக்கொரு தடையில்லை. ஏனென்றால், என் அடையாளமே கறுப்புதான்” நம்பிக்கை ததும்ப பேசுகிறார் மாடல் கேப்ரிலா செலஸ்.

சிவப்பாக இருப்பதுதான் அழகு என்பதைப் போல் சிவப்பழகை மையப்படுத்தி எண்ணற்ற விளம்பரங்கள் நாள்தோறும் நம் கவனத்துக்கு வந்து போகின்றன. அத்தகைய விளம்பரங்கள் அணிவகுக்கும் மாடலிங் துறைக்குள் டார்க் ஸ்கின் பெண்களும் வலம் வரலாம். இன்றைய தலைமுறை கறுப்பு நிறத்தைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறது. அதற்கு ரோல் மாடலாக இருக்கும் கேப்ரிலா, ‘ஐரா’ வில் இளம் வயது நயன்தாராவாக கறுப்பில் வந்து கலக்கி இருக்கிறார்.

ஐரா ரிலீஸுக்கு முந்தைய நாள் கேப்ரிலாவைச் சந்தித்தேன். ரொம்ப பிகு பண்ணிக்கொள்ளாமல் இயல்பாகவே பேசினார். “சொந்த ஊர் திருச்சி. ஸ்கூல் படிக்கிறப்பவே நடிப்பில் ஒரு ஆர்வம் இருந்தது. ஏதாச்சும் படம் பார்த்தேன்னா அந்தப் படத்தோட சீனை அப்படியே கண்ணாடி முன்னால நின்னு நடிச்சுப் பார்ப்பேன். அந்த ஆர்வம்தான் என்னை இப்ப இந்த இடத்துல கொண்டாந்து நிறுத்திருச்சுன்னு வெச்சுக்கோங்களேன்” என்று சொல்லும் கேப்ரிலா, தனது சினிமா கனவை நனவாக்குவதற்காகவே கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார். இந்தக் கறுப்பழகியின் அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். இருந்தாலும் அவர்கள் மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை.

x