ஏவிஎம் ஸ்டுடியோ அருகே இருந்த மருத்துவமனையின் முதல் தளத்தில் ‘தமிழரசன்’ ஷூட்டிங். சிவப்பேறிய கண்களும், பெருங்கோபமுமாய், வில்லன் சோனுவைப் புரட்டி எடுத்துக்கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி.
தமிழ் சினிமாவின் சொல்லி அடிக்கிற கலெக்ஷன் ‘கில்லி’ இப்போது இயக்குநர்களின் நடிகராய் மாறி, அத்தனை பாந்தமாய் பரபர ஃபைட் சீனில் ஆக்ரோஷமாய் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். நடிப்பிலும், ஆக்ஷனிலும் விஜய் ஆண்டனியிடம் நல்ல முதிர்ச்சி.
இத்தனை களேபர சண்டைக் காட்சியிலும் எந்தத் தொந்தரவும் இல்லாமல்,யாருக்கும் தொந்தரவு தராமல் ஓரமாய்க் கிடந்த மருத்துவமனை கட்டிலில் சாதாரணமாய் கால்களை ஒருக்களித்துத் துணை நடிகரைப் போலத் தூங்கிக்கொண்டிருந்தார் நடிகர் சுரேஷ் கோபி.
கேமரா, டிராலி, வில்லனின் அடியாட்களான தடிதடியான துணை நடிகர்கள் எனக் கலவர பூமியில் யாரிடமும் இடிபடாமல் ஓர் ஓரமாய் ஒதுங்கிச் சென்று இயக்குநர் பாபு யோகேஸ்வரனைச் சந்தித்தேன்.