முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒருவரை, பழைய முகத்தின் எதிரிகள் கொல்வதற்காகத் துரத்துகிறார்கள். அவர் திருப்பியடிப்பதுதான் ‘பூமராங்.'
நாயகன் அதர்வாவுக்கு இரட்டை வேடம். நதி நீர் இணைப்பு போராளி சக்தி கொல்லப்பட்டுவிட, காட்டுத்தீயால் முகம் கருகிய சிவாவுக்கு அந்த முகம் வருகிறது. சிவா முகத்துல சக்தி. தாடியுடன் இருந்தால் சிவா, மீசைகூட இல்லாமல் இருந்தால் சக்தி. இரண்டு கதாபாத்திரங்களிலும் பொருந்தியிருக்கிறார் அதர்வா. ஆக்ஷன் காட்சிகளும் கச்சிதம்.
குறும்பட இயக்குநராக மேகா ஆகாஷ். படத்தில் இவரை வீணடித்திருக்கிறார்கள். காதல் காட்சியில்கூட சரியாகப் பயன்படுத்தவில்லை. ஒரே ஒரு பாடல்தான், பாவம். படு சீரியஸான கதையில் இறுக்கமடையாமல் பார்த்துக்கொள்கிறார் சதீஷ். மனிதர் வார்த்தைக்கு வார்த்தை பட்டாசு வெடிக்கிறார். அதுவும் ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோவை, அவர் கலாய்க்கையில் திரையரங்கில் சிரிப்பலை.
தனக்கு சிரிக்கவைக்க மட்டுமல்ல, சிந்திக்க வைக்கவும் தெரியுமெனக் காட்டியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. குணச்சித்திர வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். இரண்டாம் நாயகி இந்துஜா பொருத்தமான தேர்வு. சுஹாசினி, இயக்குநர் மகேந்திரன் ஆகியோரும் முகம் காட்டுகிறார்கள். வில்லன் உபன் பட்டேலின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலுவாக்கியிருக்கலாம்.