ஆஸ்கர் வென்ற ஆவணப்படம்- தமிழனின் உழைப்புக்கு உலக அங்கீகாரம்!


எஸ்.எஸ்.லெனின்

கடந்த வாரம் நடைபெற்ற 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இந்தியப் பின்புலத்தில் உருவான ‘பீரியட்: எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’, சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் வென்றுள்ளது. சரியாக 10 வருடங்களுக்குப் பின்னர் இந்தியப் படைப்பொன்று ஆஸ்கர் அங்கீகாரம் பெற்றுள்ளது. தமிழரான கோவை முருகானந்தத்தின் கண்டுபிடிப்பை அடித்தளமாகக் கொண்டு மீண்டெழுந்த ஓர் இந்திய குக்கிராமத்து பெண்களின் கதையே இந்த ஆவணப்படம்.

உத்திரப்பிரதேசத்தில் ஹாபுர் மாவட்டத்திலிருக்கும் கிராமம் கதிகேரா. இந்தியாவின் பெரும்பான்மை கிராமங்களைப் போன்றே இங்கேயும் பெண்களின் மாதாந்திர சுகாதாரம் குறித்த அறியாமையும், அலட்சியமும் நிலவியது. முக்கியமாக கிராமத்தின் வயதுவந்த பெண்கள் எவருமே நாப்கின் உபயோகிப்பதில்லை. கந்தல் துணிகளைப் பயன்படுத்துவதும் அந்தியானதும் ஆளரவமற்ற இடத்தில் அவற்றை எறியவோ புதைப்பதோ செய்வதும் தொடர்ந்தது. இவர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், நாப்கின் உபயோகம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கிராமத்து மவுனப் புரட்சி ஒன்றையும் பதிவு செய்திருக்கிறது ‘பீரியட்: எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ ஆவணப் படம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பள்ளி ஆசிரியையான மெலிஸா பெர்டன், தனது மாணவிகளுடன் சேர்ந்து ‘தி பேட் புராஜக்ட்’ என்ற விழிப்புணர்வு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். உலகம் முழுக்க, வயதுவந்த பெண்களின் சுகாதார மேம்பாட்டுக்கான பல முன்னெடுப்புகளுடன் இவர்கள் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் இரானிய வம்சாவளி இயக்குநரான ரெய்கா ஸெஹ்டாப்சியுடன் இணைந்து ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்க முடிவு செய்கின்றனர். அப்போது இந்தியாவைச் சேர்ந்த முருகானந்தத்தின் வாழ்க்கையும் அவரின் நாப்கின் விழிப்புணர்வுக்கான செயல்பாடுகளும் தெரிய வருகின்றன. இந்தியாவில் செயல்படும் சில தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து முருகானந்தத்தை மையமாகக் கொண்ட ஆவண உருவாக்கத்திற்குத் தயாராகிறார்கள். பாலிவுட்டில் அக்‌ஷய்குமார் நடிப்பில் முருகானந்தத்தின் வாழ்க்கை ‘பேட் மேன் (Pad Man)’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவே, ஆவணப்பதிவின் மையம் மாறியது.

x