இர.அகிலன்
தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்தில் இருந்தே ‘நம்பர் 1 யார்? என்கிற போட்டி தமிழ் சினிமாவில் இருக்கிறது. எம்ஜிஆர் - சிவாஜி, கமல் - ரஜினி, அஜித் - விஜய் என்று ஹீரோக்களுக்கு இடையேயான நம்பர் ரேஸ் இப்போது தமிழ் சினிமா கதாநாயகிகளையும் ஆட்கொண்டு, ஈகோவாகவே மாறியிருக்கிறது.
அஜித்திற்கு ஜோடியாக நடித்தபோதே, தனக்கென ரசிகர் மன்றம், கட்-அவுட் என்று கோதாவில் இறங்கினார் த்ரிஷா. 36 வயதாகியும் படங்களில் திறமைகாட்டி வரும் த்ரிஷாவுக்கு ‘ 96 ‘ படம் மெகா ஹிட். ஆனால், நயன்தாராவைப் பார்த்து, சோலோ ஹீரோயினாக த்ரிஷா நடித்த ‘நாயகி’, ‘மோகினி’ படங்கள் அடுத்த நாளே தியேட்டரைவிட்டுக் கிளம்பின. ‘கர்ஜனை’ படம் வியாபாரம் ஆகாமல் ரிலீஸூக்குத் தள்ளாடி வருகிறது. ஆனாலும், ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்ததை வைத்து, இன்னமும் தனக்கு மாஸ் இருப்பதாக பந்தா காட்டுகிறார் த்ரிஷா.
சில வருடங்களுக்கு முன்பு வரையில் நட்பாக பழகி வந்த நயன்தாரா - த்ரிஷாவின் நட்பில் விஷமுள்ளாய் இறங்கியது இந்த ஈகோ ரேஸ் தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இவர்களுக்கு இடையில், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் என்று மளமளவென்று நயன்தாராவுக்குப் போட்டியாக முன்னேறிய கீர்த்திசுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படத்தில் தனி முத்திரை பதித்தார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே அவரைக் கொண்டாடினார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு, “வெயிட்டான கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன்” என்று எந்தக் கதையையும் தேர்வு செய்யாமல் பிகு செய்தார் கீர்த்தி. ஆனால், தயாரிப்பாளர்கள் வேறு மாதிரி யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு கீர்த்தி கிளாமர் ரோலில் நடிக்க யோசிக்கிறார் என்று கீர்த்தியின் கால்ஷீட் கிடைக்காத யாரோ கிளப்பிவிட்டதால் இப்போது கோடம்பாக்கம் முழுவதும், ‘கீர்த்தி அவார்ட் படங்களில் மட்டுமே நடிக்கவிருக்கிறார்’ என்கிற செய்தி வலம் வருகிறது.