சர்வம் தாளமயம் - திரை விமர்சனம்


விளிம்பு நிலை சமூகத்தில் பிறந்த ஜி.வி.பிரகாஷுக்கு மிருதங்கம் செய்வது பாரம்பரியத் தொழில். பிரபல மிருதங்க வித்வான் நெடுமுடி வேணுவுக்கு மிருதங்கம் கொடுக்கப்போன இடத்தில் அவரது இசைக்கு பித்தன் ஆகிறார். நெருக்கடிகள், நிராகரிப்புகளை மீறி நெடுமுடி வேணுவிடம் மிருதங்கம் கற்கும் நாயகனின் கனவு நிறைவேறுகிறது. ஆனால், தொடர்ந்து சில உள்ளடி வேலைகளால் குரு - சிஷ்ய உறவிலும் பிணக்கம் வர, இசையில் ஜி.வி.பிரகாஷ் எப்படி ஜெயித்தார் என்பதே மீதிக்கதை.

கபாலித் தோட்டம் ஜான்சன் மகன் பீட்டராக ஜி.வி.பிரகாஷ் வாழ்ந்திருக்கிறார். நெடுமுடி வேணுவின் மிருதங்க வாசிப்பைப் பார்த்து முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டுவது, காதலிக்காக ஜெர்மன் மொழி கற்கப் போகும் இடம், நெடுமுடி வேணுவின் பார்வைக்காக அவமானங்களைத் தாண்டி காத்து நிற்பது, விஜய் ரசிகராக அதகளம் செய்வது, கூடவே கலைக்கான ஏக்கத்தைக் கடத்துவது எனப் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

மிருதங்க வித்வானாக நெடுமுடி வேணு அபார நடிப்பை வழங்கியுள்ளார். இசைக்கு ஏற்ற அவரது உடல்மொழி, லேசான தெனாவெட்டு என கனகச்சிதமாகப் பொருந்திப் போகிறார். துவக்கக் காட்சிகளில் ஆதிக்க மனப்பான்மையோ என எண்ண வைக்கும் நெடுமுடி வேணு, ருத்திராட்சத்தை ஜி.வி.பிரகாஷ்க்கு கொடுக்கும் இடத்திலும், “நீ கச்சேரி வாசிக்கணும், அதை நான் கேட்கணும்” எனச் சொல்லும் இடத்திலும் ஈர்க்கிறார்.

எதிர்மறை கதாபாத்திரத்தில் வினித். அக்கதா பாத்திரத்தின்  மூலம் சமூக ஏற்றத்தாழ்வையும் கடத்துகிறார் இயக்குநர் ராஜீவ்மேனன். தொலைக்காட்சித் தொகுப்பாளராக வருகிறார் திவ்யதர்ஷினி. ஆனால், நெடுமுடி வேணு மீது அவருக்கு ஏன் வன்மம், வினித் கடைசிக் காட்சியில் ஜி.வி.பிரகாஷை எந்த மனநிலையில் ஆதரித்தார் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

x