பேசும் படம் - 6:  ‘டாங்க் மேன்’


சரித்திரத்தில் சீனா பல புரட்சிகளைக் கண்டுள்ளது. அந்தப் புரட்சிகளில் ஒன்று தியானமென் சதுக்க (Tiananmen Square) புரட்சி. 1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக அந்நாட்டு மாணவர்களும், தொழிலாளர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெய்ஜிங்கில் உள்ள தியானமென் சதுக்கம் இப்போராட்டத்தின் முக்கியக் களமானது. ஆயிரக்கணக்கில் மாணவர்களும், தொழிலாளர்களும் இச்சதுக்கத்தில் ஒன்றுகூடி, ஆளும் பொதுவுடைமைக் கட்சிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பினர்.



எப்ரல் 15-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் மெல்ல மெல்ல நாடெங்கும் பரவியது. அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை சீன அரசு மேற்கொண்டது. இறுதியாக, போராட்டக்காரர்கள் மீது ராணுவ நடவடிக்கை ஏவப்பட்டது. சீன
ராணுவம், டாங்கிகளுடன் தியானமென் சதுக்கத்தில் நுழைந்து போராட்டக்காரர்களை விரட்டியடித்து, ஜூன் 4-ம் தேதி
தியானமென் சதுக்கத்தை மீண்டும் தன் வசப்படுத்தியது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டத்தின் அடையாளமாக இன்றுவரை பேசப்படும் படமாக ‘டாங்க் மேன்’ படம் உள்ளது. இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த 100 படங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

தியானமென் சதுக்கத்தில் நடந்த போராட்டங்களைப் படமெடுக்கவும், அது பற்றிய செய்திகளை சேகரிக்கவும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், அவற்றையெல்லாம் சமாளித்து இந்தப் படத்தை எடுத்துள்ளார் ஜெஃப் வைடனர்.

இதைப்பற்றிக் கூறும் ஜெஃப் வைடனர், “1989-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி பெய்ஜிங் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் மாடியில் இருந்து இந்தப் படத்தை எடுத்தேன். முதலில் அந்தக் கட்டிடத்துக்குள் கேமராவுடன் நுழைய கடுமையான கெடுபிடிகள் இருந்தன. அதனால் கேமராவை பல பாகங்களாக பிரித்து அதை ஒளித்துவைத்து நண்பர்களின் உதவியுடன் கட்டிடத்துக்குள் எடுத்துச் சென்றேன்.

தியானமென் சதுக்கத்துக்குள் உலாவரும் ராணுவ டாங்கிகளைப் படமெடுப்பதுதான் என் எண்ணமாக இருந்தது. அப்படி படம் எடுத்துக்கொண்டு இருந்த சமயத்தில் இரு கைகளிலும் பைகளை ஏந்திய ஒருவர், ராணுவ டாங்கிகளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. முதலில் நான் துல்லியமாக டாங்கிகளைப் படமெடுப்பதை அந்த நபர் கெடுத்துவிடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் பின்னர், அதே நபர் ராணுவ டாங்கிகளைத் தடுக்கும் விதமாக அவற்றை மறித்தது வியப்பை அளித்தது. அவரைத் தவிர்த்து வேறு பாதையில் செல்ல டாங்கிகள் முயன்றாலும், அந்த மனிதர் மீண்டும் மீண்டும் அவற்றின் குறுக்கே போய் மறித்தார். ஒரு பெரிய வல்லரசுக்கு எதிராக தைரியமாகக் குரல் கொடுத்த அந்த மனிதனை வியந்துகொண்டே அதைப் படமெடுத்தேன். அவரை பீரங்கிகள் சுட்டுவிடுமோ என்றுகூட பயந்தேன். ஆனால், நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை. ஒருசில ராணுவ வீரர்கள் வந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்” என்கிறார்.

அன்றைய தினம் ஜெஃப் வைடனர் எடுத்த படம் அடுத்த நாள் உலகளாவிய அளவில் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகி தியானமென் சதுக்க புரட்சியைப் பற்றி அனைவருக்கும் சொன்னது. ஆனால், இன்றுவரை டாங்கிகளை மறித்த அந்த மனிதர் யாரென்றோ, அந்தச் சம்பவத்துக்குப் பின் அவருக்கு என்ன நடந்தது என்றோ யாருக்கும் தெரியவில்லை.

ஜெஃப் வைடனர் (Jeff Widener)

1956-ம் ஆண்டு பிறந்த அமெரிக்கரான ஜெஃப் வைடனர், 1977-ம் ஆண்டு ‘தி விட்டர் டெய்லி நியூஸ்’ என்ற பத்திரிகையின் புகைப்படக்காரராக பயணத்தை தொடங்கினார். பின்னர், ஏபி செய்தி நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிய இவர், பல முக்கியப் படங்களை எடுத்துள்ளார். பணி நிமித்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்து, பல்வேறு நாடுகளில் நடந்த உள்நாட்டு போர்களைப் படம் பிடித்துள்ளார் வைடனர். ‘டாங்க் மேன்’ படத்துக்காக 1990-ம் ஆண்டு புலிட்சர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்தபோதிலும் இவருக்கு அவ்விருது கிடைக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தற்போது ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தங்கியுள்ளார்.

x