விஸ்வாசம் -திரை விமர்சனம்


கொலை முயற்சிகளில் இருந்து தன் மகளைக் காப்பாற்றத் துடிக்கும் தந்தையின் கதையே ‘விஸ்வாசம்'.

தேனி மாவட்டத்தில் அரிசி ஆலையை நடத்தி வருபவர் தூக்குதுரை (அஜித்). ஏரியா முழுக்க சண்டை என்றாலும் சமாதானம் என்றாலும் ஒற்றை ஆளாக துவம்சம் செய்கிறார். அந்த ஊருக்கு மருத்துவ முகாம் நடத்த வரும் நிரஞ்சனாவுக்கு (நயன்தாரா) அஜித்தின் மீது காதல் மலர்கிறது. திருமணம் முடிந்து எல்லாம் சுமுகமாய் செல்ல, மகள் பிறந்த பிறகு அஜித்தின் அடிதடி நயனுக்குப் பிடிக்காமல் போக இருவரும் பிரிகிறார்கள். நயன்தாரா தன் குழந்தையுடன் மும்பையில் செட்டிலாகி விடுகிறார்.

10 வருடங்கள் கழித்து ஊர் திருவிழாவுக்காக மனைவி, மகளை அழைக்க மும்பை விரைகிறார் அஜித். அங்கே மனைவி பார்க்க, பேச அனுமதிக்காததால் வேதனை அடைகிறார். அந்தச் சூழலில் மகளுக்கு இருக்கும் ஆபத்து தெரியவர, எதிரிகளை வேட்டையாடுகிறார் அஜித். மகளுக்கு யாரால் ஆபத்து, அவர் ஏன் தந்தையை வெறுக்கிறார், எதிரி எப்படி மனம் மாறுகிறார், கொலை முயற்சிகளிலிருந்து தன் மகளை எப்படி அஜித் காப்பாற்றுகிறார், நயன் - அஜித் இணைந்தார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

மகளின் பாசத்துக்காக ஏங்கும் வெள்ளந்தியான கிராமத்துத் தந்தையின் குணத்தைக் கண்முன் நிறுத்தும்போது அஜித் மனதில் நிறைகிறார். அங்கிள் என்று மகள் அழைக்கும்போதும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அடையாளம் மறைத்து அன்பைப் பொழிவது, மனைவியின் பிறந்த நாளில் ‘வாழ்த்துகள் நிரஞ்சனா’ என்று வாய் வரைக்கும் வந்ததை அப்படியே சொல்லி பின் ‘வாழ்த்துகள் மேடம்’ என்று கூறி கணவன் - மனைவிக்கு இடையிலான இடைவெளியை உணர்த்துவது, மகளுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் சந்தேகப்படும் நபர்களையெல்லாம் புரட்டி எடுப்பது என முந்தைய படங்களைக் காட்டிலும் அஜித் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்.

x