பேட்ட -திரைவிமர்சனம்


ரெஸ்யூம்கூட கையில் இல்லாமல், பெரிய இடத்து ரெக்க மென்டேஷனுடன் மலைப்பிரதேச கல்லூரியின் தற்காலிக வார்டன் பணியில் சேர்கிறார் காளி (ரஜினி). ரவுடித்தனம், ராக்கிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கிற அந்த மாணவர் விடுதியை தன் அதிரடியால் கட்டுப்படுத்துகிற அவர், ஒரு மாணவனின் (சனந்த்) காதலுக்கும் உதவுகிறார். திடீரென வடநாட்டு ரவுடி கும்பல் ஒன்று காளியையும் அந்த மாணவனையும் கொல்ல முயற்சிக்கிறது.இதற்கு, இளம் வயதில் காளி மிச்சம் வைத்த பகைதான் காரணம் என்று தெரியவர, அடுத்து நடக்கிற வேட்டை தான் ‘பேட்ட'.

வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவிரும்பி, தன் வழக்கமான ரசிகர்களைக் கைவிட்டுவிட்ட ரஜினி, இந்தப் படத்தில் அவர்களுக்குத் திகட்டத் திகட்ட விருந்து படைத்திருக்கிறார். திரையில் அவர் அறிமுகமாகும் காட்சியே மாஸாக இருக்கிறது. இளமை, ஸ்டைல், அதிரடி, பன்ச் வசனங்கள் என்று அதகளம் பண்ணியிருக்கிறார். கூடவே, நகைச்சுவை, நடனத்திலும் கலக்கியிருக்கிறார்.

“புதுசா ஒருத்தன் வந்தா, அவனை எல்லாருமா சேர்ந்து விரட்டி விடணும்னு பார்க்கிறீங்கள்ல. இனிமே அது நடக்காது” என்பது மாதிரியான அரசியல் வசனங்களும் இருக்கின்றன. கூடவே, வில்லனின் கூடாரம் என்று இந்துத்துவா அரசியல், காவி கொடி, தேச பக்தர்கள், பசு பாதுகாவலர்கள், காதலர் தினத்தில் கட்டாயக் கல்யாணம் போன்றவற்றை எல்லாம் காட்டுகிறார்கள். ‘ஆன்டி இண்டியன்’ என்று திட்டுவதும், தங்களைத் தாங்களே கலாச்சார காவலர்கள் என்று சொல்வதும் என்ன அரசியல் கணக்கென்று நமக்குப் புரியவில்லை.

ரஜினிக்கு 2 ஜோடி. வயதான ரஜினியின் ஜோடியாக வருகிற சிம்ரன், அவ்ளோ இளமையாக இருக்கிறார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பாவம் த்ரிஷா. ஃபிளாஷ்பேக்கில் ஒரு ஓரமாக வந்து போகிறார்.

x