நிஜத்திலும் நான் அராத்து ஆனந்திதான்!- ஜாலியாய் பேசும் சாய் பல்லவி


நா.இரமேஷ்குமார்

ஜெயலலிதாவின் ‘இட்லி, ஜூஸு’க்காக அப்போலோ செலவழித்த தொகைசமூக வலைதளங்களில் வறுபட்டுக் கொண்டிருந்த மதிய நேரத்தில் தேனாம்பேட்டை ஹோட்டல் ஹயாத்தில் லன்ச் வித் சாய் பல்லவி. உப்பிய கன்னங்களில் வார்த்தைக்கு வார்த்தை பொங்கி வழிகிறது சிரிப்பு. ‘ப்ரேமம்’ மலர் டீச்சராக ‘96’ ஜானுவுக்கெல்லாம் முன்பாகவே இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் அத்தனை ரசனையாய் பேச ஆரம்பிக்கிறார்.

‘ப்ரேமம்’ படத்துக்கு கிடைச்ச வரவேற்பு பற்றி..?

சத்தியமா எதிர்பார்க்கலைங்க... ஆக்சுவலா அந்த ஒரு படம் மட்டும்தான் பண்ணுவேன்னு நினைச்சிருந்தேன். இப்ப தென்னிந்தியா முழுக்கவே ‘ப்ரேமம்’ மலர் டீச்சரைப் பற்றி பேசுறாங்கன்னா அதுக்கு கடவுளுக்குதான் நன்றி சொல்லணும். டி.வி. நிகழ்ச்சிகள் பண்ணிக்கிட்டிருக்கும்போதே சினிமாவுக்கான வாய்ப்புகள் நிறைய வந்துச்சு. ஆனா, அப்பா, அம்மா தயங்கினாங்க. சினிமாவுக்குப் போனா என்னோட எதிர்காலம் என்னாகுமோன்ற பயம் அவங்களுக்கு. ஓ.கே. அப்போ, நாம சினிமாவுல நடிக்கவே போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். ‘ப்ரேமம்’ படத்துக்காக அல்ஃபோன்ஸ் என்கிட்ட கேட்டப்ப அம்மா, அப்பாகிட்ட கேட்டேன். என்ன நெனச்சாங்களோ தெரியல... உடனே ஓ.கே.ன்னுட்டாங்க. கனவு மாதிரி இருந்துச்சு.
`இப்போ ஏன் சரின்னு சொல்றீங்க?’ன்னு கேட்டப்போ, “அன்னிக்கு எங்களுக்காக நீ நடிக்கலைன்னு சொன்னே... இப்ப உனக்காக நாங்க சொல்றோம்” அப்படின்னாங்க. ஆசைக்காக அந்த ஒரு படம் மட்டும்தான்னு நினைச்சேன். இந்த வரவேற்பு, தொடர்ச்சியான படங்கள்னு எதுவுமே எதிர்பார்க்காததுதான்.

x