குளித்தலை என்ற கிராமத்திலிருந்து செல்லும் விவசாயியின் மகள் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் கிரிக்கெட் வீராங்கனையாக சாதித்தால் அதுவே ‘கனா’.
ஒட்டுமொத்தப் படத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் தாங்கி நிற்கிறார். வெகுளிப் பெண்ணாக இருந்துகொண்டு கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் இடங்களிலும், வறுமை நிலையிலும் அம்மாவின் எதிர்ப்பை மீறி அடம் பிடிக்கும் தருணங்களிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு காட்சியில் கூட மிகைத்தன்மை எட்டிப்பார்க்காத அளவுக்கு பாத்திரமாக்கத்துக்குத் தேவை
யான நிறைவான, இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். கதாநாயகியை மையமாகக் கொண்ட படம் என்றால் இனி ஐஸ்வர்யா ராஜேஷின் பெயரும் தவறாமல் பட்டியலில் இடம்பெறும் என்று நம்பலாம்.
விவசாயத்தின் வீழ்ச்சியைக் கண்டு நொந்துபோகும் சத்யராஜ் தன் மகளை ஆளாக்கிப் பார்க்கும் கனவுகளைச் சுமக்கும்போது பொறுப்பான தகப்பனைக் கண்முன் நிறுத்துகிறார். ஆண்களுடன் விளையாடச் செல்லும் மகளைக் கண்டிக்கும் கறாரான அம்மாவாக ரமாவின் நடிப்பு பலே. அதே மகளிடம், “ஆசைப்பட்டா மட்டும் பத்தாது. அடம்பிடிக்கவும் தெரியணும், நீ பிடிக்கிற அடம் எந்த அளவுக்கு உனக்கு அது பிடிச்சுருக்குன்னு காட்டும்'' என்று தடைக்கல்லையே படிக்கல்லாக மாற்றிப் போடும்போது சபாஷ் பெறுகிறார்.
சோர்ந்துபோன சத்யராஜை மிக சாமர்த்தியமாகத் தேற்றி நம்பிக்கையூட்டும் கதாபாத்திரத்தில் இளவரசு இதயத்தில் இடம் பிடிக்கிறார். சச்சின், டெண்டுல்கராக வரும் சவரிமுத்துவும் ஆண்டனி பாக்யராஜும் நகைச்சுவை என்ற பெயரில் கடுப்பேத்துகிறார்கள். முனீஸ்காந்த் ராம்தாஸ் பதற்றம், பரபரப்பு என்ற பெயரில் வெளிக்காட்டும் உணர்வுகள் படத்துக்கு அந்நியமாகவே இருக்கிறது. தன்னம்பிக்கையை விதைக்கும் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரின் கனவும் அதற்கான காரணங்களும் படத்துக்கு வலு.