அடங்க மறு - விமர்சனம்


மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் காவல்துறை பணிக்கு வரும் நாயகனை அங்கு ஏற்கெனவே இருக்கும் சிஸ்டம் நிலைகுலைய வைக்கிறது. நேர்மை, துணிச்சலோடு செயல்பட்டதால் தன் குடும்பத்தையே இழக்கும் நாயகன், காக்கிச்சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு அதற்குக் காரணமானவர்களைப் பழிதீர்ப்பதே ‘அடங்க மறு’வின் ஒருவரிக் கதை.

அமைச்சர் மகனாகவே இருந்தாலும் ரூல்ஸை மீறினால், அடித்து துவம்சம் செய்யும் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயம் ரவி செம ஃபிட்டாக ஒட்டிக் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் துடிப்பான போலீஸ் அதிகாரியாகத் திமிறுவது, ராஷி கண்ணாவுடனான காதல் எபிசோட், அண்ணன் குழந்தைகளுடன் சேர்ந்து செய்யும் கலாட்டாக்கள் எனத் தனி ஆளாய் மொத்தப் படத்தையும் தாங்குகிறார் ஜெயம் ரவி. அதிலும், அந்த போலீஸ் விசாரணையை டீல் செய்கிற விதம் ரசனை.

ஜெயம் ரவிக்கு இணையாக படம் முழுக்கவே யதார்த்தமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் அழகம்பெருமாள். அதிலும், நடுராத்திரியில் மகள் இறந்த செய்தியை காலிங் பெல் அடித்து பெற்றவர்களிடம் சொல்கிற காட்சியாகட்டும், போலீஸ் விசாரணையில், “நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா சார்?” என்று சம்பத்திடம் ஜெயம் ரவிக்காக பரிதாபப்பட்டு கேட்கிற இடமாகட்டும், மனுஷன் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் செம்ம!

டாஸ்மாக் கடைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், அரசியல்வாதிகளின் வாரிசுகள் செய்யும் அட்டூழியம், வசதியான வீட்டுப் பையன்களின் போக்கு எனப் படத்தில் பல இடங்களில் தன் சமூகப் பொறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல். காவலர்களையும்கூட ஜெயம் ரவி பாத்திரத்தின் ஊடே ‘போராளி’யாய் முன்னிறுத்த முயன்றுள்ளார் இயக்குநர்.

x