இந்தப் படத்துல தடை செய்யுறதுக்கு எதுவுமே இல்லை- ‘மெரினா புரட்சி’ இயக்குநர் எம்.எஸ்.ராஜ்


நா.இரமேஷ்குமார்

“மெரினா புரட்சி ஒரு புலனாய்வு அரசியல் ஆவணப்படம். இந்தப் படம் ரிலீஸாகும்போது பல தமிழ்ப் பிரபலங்களின் முகத்திரை கிழியும். இந்தப் படத்தின் பின்னணியில் பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறோம்" எனப் பொடிவைத்துப் பேசுகிறார் இயக்குநர் எம்.எஸ்.ராஜ். இயக்குநர் சேரனிடம் சினிமா கற்றவர். `மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை’ என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில், மெரினா போராட்டங்களை மையக் கருவாக வைத்து உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்துக்கு சென்சார் அனுமதி மறுப்பட்டு வருகிறது. படத்தில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? இயக்குநர் எம்.எஸ்.ராஜை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்; விளக்கமாகவே பேசினார்.

‘மெரினா புரட்சி’ என்ன மாதிரியான படம்?

இது வழக்கமான தமிழ் சினிமா மாதிரி ஹீரோ, ஹீரோயின், பாட்டு, காமெடின்னு எல்லாம் இருக்காது. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு இப்போ தான் மெரினாவில் இவ்வளவு பெரிய மக்கள் எழுச்சி போராட்டம் நடந்திருக்கு. அப்படியொரு மக்கள் எழுச்சி ஏற்பட்டப்போ எனக்குள்ள, இது எப்படி சாத்தியமாச்சுன்னு ஆச்சரியம். நான் அடிப்படையில பத்திரிகைக்காரனா இருந்ததால, அதைப் பற்றிய புலனாய்வு செய்தப்போ அதிர்ச்சியான தகவல்கள் நிறைய கிடைச்சது. அதை இன்னும் புலனாய்வு செய்தபோது, எனக்குக் கிடைத்த உண்மைகளைத்தான் படமாகக் காட்சிப்படுத்தியிருக்கேன். அது தான் மெரினா புரட்சி படம்.

x